இயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..!
பருவநிலை மாற்றம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம் என சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆம். இது நாம் நின்று கவனிக்க வேண்டிய ஒன்று. உயிர்கள் வாழ ஆக்சிஜன் என்பது நிச்சயம் அவசியமான ஒன்று. அப்படியிருக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது நாம் வாழும் பூமியின் நிலைமை என்ன ஆகும்..? அதில் உயிர்கள் எப்படி வாழ முடியும்..? நாம் செய்யும் செயலால் பூமி பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை கவனிக்க மறந்து விட்டோம். உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த பல நாடுகள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒவ்வொருவரும் முன்வந்தால்தானே அதனை சாத்தியமாக்க முடியும்.
இப்போத நவராத்தி பூஜை கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நவராத்தி பூஜை கொண்டாட்ட நேரங்களில் நகரங்களில் மக்காத குப்பைகளின் அளவு 9 சதவீதம் அதிகரித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா..? இதனையறிந்த சென்னை திநகரில் உள்ள பெங்கால் சங்கம் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதாவது பிளாஸ்டிக் இல்லாத நவராத்திரி கொண்டாட்டத்திற்கு முன்வர வேண்டும் என நீண்டு நாட்கள் யோசித்து அதனை இந்தாண்டு நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் சவுமியா கூறும்போது, “ பிளாஸ்டிக் இல்லாத நவராத்தி பூஜை கொண்டாட விரும்பினோம். ஆனால் இதற்கு கடந்த ஆண்டைவிட 100 சதவீதம் அதிக தொகை செலவாகும். இருப்பினும் இயற்கையை பாதுகாப்பதும், நேசிப்பதும் தானே கொண்டாட்டம். அதன்படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அதற்காக பிளாஸ்டிக் தட்டுகளை அறவே தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோல பிளாஸ்டிக் கவர்கள் என எதையும் அனுமதிக்கவில்லை. அதற்காக பனை ஓலை இலைகள், கரும்பு நாரால் ஆன தட்டுகள் ஆகியவற்றை தான் பயன்படுத்தினோம்” என கூறியுள்ளார்.
இதனிடையே பண்டிகை காலங்களில் கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தும் வண்ண வண்ண பிளாஸ்டிக் கவர்கள், பலூன்கள் போன்றவற்றாலும் குப்பைகள் சேரும் என கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதனையும் பொதுமக்கள் முடிந்தவரை தவிர்க்கலாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Courtesy: TheTimeofIndia