எம்.பி ஜெகத்ரட்சகன் விவகாரம்: வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை; கண்டுபிடிக்கப்பட்டவ என்னென்ன?

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் ரொக்கம், 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்pt web

ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்கள் மற்றும் சவிதா கல்வி குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கல்வி நிறுவனங்கள் மூலமாக வரும் வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சவிதா கல்வி குழுமம் கட்டண ரசீதுகளை மறைத்தது மற்றும் முறைகேடாக ஸ்காலர்ஷிப் வழங்கியது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முதற்கட்டமாக ஆய்வு செய்வதில் 400 கோடி ரூபாய்க்கு மேல் கட்டண வசூல் செய்தது குறித்த, கணக்கில் காட்டப்படாத ரசீது ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும், 25 கோடி ரூபாய் அளவிற்கு ஸ்காலர்ஷிப் முறைகேட்டில் ஈடுபட்டதும், 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜெகத்ரட்சகன் தொடர்பான கல்வி குழுமங்கள், மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து குறிப்பிட்டுள்ள வருமான வரித்துறை, கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக தரகர்களுக்கு சுமார் 25 கோடி ரூபாய் கமிஷனாக கணக்கில் காட்டப்படாமல் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மதுபான ஆலை நிறுவனங்கள், ஆல்கஹால் உள்ளிட்ட மதுபானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியது தொடர்பான 500 கோடி ரூபாய் செலவு கணக்குகளை பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. பல காசோலைகள் இல்லாத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஜெகத்ரட்சகன் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் 300 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக தனிப்பட்ட செலவுகளுக்காகவும், வெவ்வேறு தொழில்களுக்கும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 32 கோடி ரூபாய் பணம் மற்றும் 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com