சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் நிர்வகித்து வரும் மிடாஸ் ஆலையில் 8 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகம், கோவையில் உள்ள எஸ்.வி.எஸ் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மிடாஸ் மதுபான ஆலை மட்டுமின்றி, அதனருகில் செயல்பட்டு வரும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் காட்டன் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, மிடாஸ் நிறுவனத்தில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தற்போதைய ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில், ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.