சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஜெயா தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சோதனை குறித்த விவரங்கள், டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் அலுவலகம், விவேக்கிற்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய சோதனை 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்டஆவணங்கள், பணம், தங்கம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த முதல் கட்ட அறிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். மேலும், அதனை டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
250க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னர் அடுத்த கட்ட அறிக்கை விரிவாக தயார் செய்யப்பட்டு வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.