ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை - காரணம் என்ன?

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
G Square
G Square PT

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னணி கட்டுமான மற்றும் நில விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஜி ஸ்கொயர் நிறுவனம். கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்நிறுவனமானது பெரிய அளவில் வருமானம் ஈட்டியிருப்பதாகவும், குறிப்பாக 2019, 2020 ஆண்டுகளில் 53 கோடியாக மட்டுமே இருந்த இந்நிறுவனத்தின் வருமானம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 33,000 கோடியாக வளர்ந்ததாகவும் கூறி, அது எப்படி வளர்ந்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பியிருந்தார். குறிப்பாக கடந்த 24ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து விவர அறிக்கையில், இந்நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

Annamalai
Annamalaipt desk

பாஜகவின் புகாருக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், “திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பிலிருந்து நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் மீது பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எங்கள் நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது கட்டுப்பாட்டிலோ இல்லை. எங்கள் நிறுவனம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட சொத்துமதிப்பு தவறானது. தவறான முறையில் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்பவைக்க ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு இது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

IT raid
IT raidPixabay

இந்நிலையில் இன்று சென்னை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையிலுள்ள ஆழ்வார்ப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக எந்த அளவுக்கு பொருளாதாரம் ஈட்டியுள்ளனர்? கணக்கில் வராத பணம் எவ்வளவு? எவ்வளவு சொத்துக்களை முதலீடு செய்துள்ளனர் என்பது போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் முதற்கட்டமாக வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com