ஓசூர் கிரஷர் அதிபர் வீட்டில் IT Raid: ரூ.1.20 கோடி பணம், 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல்! யார் இவர்?

கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிரஷர் உரிமையாளர்
கிரஷர் உரிமையாளர்pt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகர் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ் குமார் (35). இவர் பேரண்டப்பள்ளி என்ற இடத்தில் கிரஷர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் குமார் பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்தபோது, ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் இவரது காரில் சோதனை செய்துள்ளனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாயை லோகேஷ் குமாரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

IT Raid
IT Raidpt desk

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை ஓசூர் வருமான வரித்துறை துணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர், லோகேஷ் குமாரின் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் லோகேஷ் குமார் வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் சுமார் 100 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் போலீசாரின் வாகனத்தில் ஏற்றி ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், வங்கியில் பணம் மற்றும் தங்க நகைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

ஓசூரில் கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார் பெங்களூரு கே ஆர் புரா சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏ பசவராஜின் உதவியாளராக இருக்கும் மஞ்சுநாத் என்பவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com