வடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்தான் - தனுஷ்
வடசென்னை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்தான் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அசுரன்’. பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எஸ்.தாணு படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷ் தந்தை மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசுரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், “வடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்தான். அந்த வருத்தம் எனக்கானதாகவும், வெற்றிமாறனுக்கானதும் இல்லை. எங்கள் கலை இயக்குநர் ஜான்சனுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.
பரியேறும் பெருமாள் உட்பட பல படங்களின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.