மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது: மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது: மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது: மத்திய அரசு
Published on

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. பின் 2018 ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019 ஜனவரி 27 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டுமான முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. கட்டுமான பணிகளுக்கான கடன் ஒப்பந்தம் 26.03.21 அன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. ஆனாலும், சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.

மேலும், 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிறது. புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள் எனவும் அதில் ரூ 1627.70 கோடிகள் 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் ( நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் மதுரை எய்ம்ஸ் டெண்டர் , மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கேட்டிருந்தார். அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது. "திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை. மதுரை எய்ம்ஸில் மருத்துவ மாணவர் சேர்க்கை வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com