\
IT Employee Arrested in Shocking Chain Snatching Case
கோப்புபடம்Ai

ஆன்லைன் TRADING மோகம்.. செயின் திருடிய ஐடி ஊழியர்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ்!

ஐடி நிறுவன ஊழியர் செயின் பறிப்பு வழக்கில் கைதாகி உள்ளார்.. ஏன் செயின் பறிப்பில் ஈடுபட்டார் என்ற போலீசாரின் கேள்விக்கு அதிர்ச்சி அளிக்கும் பதிலை அந்த நபர் கூறியிருக்கிறார்.. நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.
Published on: 

சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சானடோரியம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அருகில் இருந்த நடைமேம்பாலம் வழியாக வந்துக் கொண்டிருந்த அவர், அங்கு இருந்த ஆதரவற்ற மக்களுக்கு, தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கிய இனிப்புகளை கொடுத்துள்ளார். அந்த சமயத்தில், திடீரென வந்த நபர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை, புவனேஸ்வரியின் முகத்தில் அடித்துள்ளார்.

AI

பின்னர், அந்த பெண் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயின் பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், அவரை ஒப்படைத்தனர். காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது, பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் தான் குப்புசாமி. ஓ.எம்.ஆரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஆன்லைன் டிரேடிங்கில் அதீத ஆர்வம் கொண்ட இவர், தன்னிடம் இருந்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார். மேலும், பலரிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தையும், முதலீடு செய்திருக்கிறார். ஒட்டுமொத்த பணத்தையும் இழந்ததால், கடன் வழங்கியவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், தனது சொந்த வீட்டை 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, கடனை அடைக்க முடிவு செய்துள்ளார். ஆனால், கடைசி நேரத்திலும் மிகுந்த பேராசையுடன் செயல்பட்ட அவர், அந்த 60 லட்சம் ரூபாயை வைத்தும் டிரேடிங் செய்துள்ளார்.

Ai

கடைசியில், அந்த பணத்தையும் இழந்துவிட்டதால், செயின் பறிப்பில் ஈடுபட்டு கடன் பிரச்சனையை சரி செய்ய முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நடை மேம்பாலத்தில் இருந்த புவனேஸ்வரியிடம் நகையை பறிக்க முயன்றபோது, பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். இவை அனைத்தையும் விசாரணையின் மூலம் கண்டறிந்த போலீசார், குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். ஐடி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தபோதிலும், ஆன்லைன் டிரேடிங் மோகத்தாலும், அதிக லாபம் கிடைக்கும் என்ற போராசையாலும், கைதாகும் நிலைக்கு அந்த நபர் சென்றிருப்பது, பலரையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

IT Employee Arrested in Shocking Chain Snatching Case
இந்தியாவில் நெருக்கடி நிலை; இந்திராகாந்தி செய்தது தவறு - சோனியாகாந்தி