இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு
இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதற்காக ரூ.1.30 கோடி லஞ்சம் பெற்றதாக இடைத்தரகர் எஸ்.கே.சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரனுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிக பணத்துடன் சந்தேகப்படும்படி ஒருவர் நடமாடுவதாக உளவுத்துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற போலீசார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தனது பெயர் எஸ்.கே.சந்திரா என்றும், சுகேஷ் சந்திரசேகரா என்றும் சதீஷ் சந்திரா என்றும் மாற்றி மாற்றி தெரிவித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் முறையாக விசாரித்தபோது, அவர் இரட்டை இலை பெற்றுத் தர லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.
சசிகலா அணியின் டிடிவி தினகரனிடமிருந்து ரூ. 1.30 கோடி பெற்றதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.