நேரு விளையாட்டு அரங்கம்: பதக்க கனவுகளுக்குத் தடை போடும் மின் விளக்கு!

நேரு விளையாட்டு அரங்கில் மாலை வேளையில் பயிற்சி செய்பவர்களுக்கு மின்விளக்கு வசதி கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
நேரு விளையாட்டு அரங்கம்
நேரு விளையாட்டு அரங்கம்புதிய தலைமுறை

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு. இதற்கேற்ப பல சர்வதேச தொடர்கள் சென்னையில் வரிசைக்கட்டினாலும், இங்குள்ள நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகிறதா என்றால் அது கேள்விக்குறியே.

தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய ராஜிவ் பாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், ஜெயலட்சுமி, ஆரோக்கிய ராஜிவ், சாந்தி சௌந்தரராஜன், குமரவேல் பிரேம்குமார் என பல வீரர், வீராங்கனைகளின் பயணம் நேரு விளையாட்டு அரங்கில் இருந்து துவங்கியதுதான்.

அப்படிப்பட்ட மைதானத்தில் மாலை 6 மணிக்கு மேல் பயிற்சி மேற்கொள்ள முடியாத ஒரு சூழலே நிலவுகிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற 550 வீரர்கள் காலை மாலை இரு வேளைகளும் பயிற்சி செய்கிறார்கள்.

இவர்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையே பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு பயிற்சி மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் கல்லூரியில் படித்து வருவதாலும் பணியாற்றி வருவதாலும் மாலை 5 மணிக்கு மட்டுமே மைதானத்திற்கு வருகின்றனர்.

அவ்வாறு வரும் விளையாட்டு வீரர்கள் ஆறு மணி வரையே பயிற்சி செய்ய முடியும். குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது பயிற்சி மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் மாலை 6 மணிக்கு பயிற்சி முடிந்தாலும் முடியாவிட்டாலும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழலே உள்ளது. அப்படியே அவர்கள் பயிற்சியைத் தொடர்ந்தாலும் அவர்களைச் சுற்றி இருளே சூழ்ந்திருக்கிறது

நேரு விளையாட்டு அரங்கம்
டி10 போட்டிகளை நடத்தும் திட்டத்தில் பிசிசிஐ! அப்படினா ஐபிஎல்-ன் எதிர்காலம் - விவரம் என்ன?

102 கோடி ரூபாய் செலவில் செஸ் ஒலிம்பியாட், 42 கோடி ரூபாய் செலவில் ஃபார்முலா, 16 கோடி ரூபாய் செலவில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர், 5 கோடி ரூபாய் செலவில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை, 5 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓபன் டென்னிஸ் என பல கோடி ரூபாய்களை சர்வதேச போட்டிகளுக்கு செலவு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.

ஆனால், நேரு விளையாட்டு அரங்கில் மாலை வேளையில் பயிற்சி செய்பவர்களுக்கு மின்விளக்கு வசதி கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. இதுபற்றி நேரு விளையாட்டு அரங்க நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, பராமரிப்புப்பணிகள் நடப்பதாகவும், அதன் பின்னர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com