சாலை விபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் உயிரிழப்பு
ஆவடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்திரமேரூர், கவிதண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி(45). இஸ்ரோவில் சயின்டிஸ்ட் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். ராக்கெட்டுக்கு தேவையான உதிரிபாகங்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படுவதால் அதன் தரம் எப்படி உள்ளது என்பது குறித்து அந்தந்த தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இன்று வழக்கம்போல் ஆவடி சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோவின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.