ஈஷா மையத்தில் விதிகளை மீறி கட்டுமானம்: தமிழக அரசு

ஈஷா மையத்தில் விதிகளை மீறி கட்டுமானம்: தமிழக அரசு
Published on

கோவை ஈஷா யோகா மையத்தில் விதிகளை மீறி கட்டுமானம் நடைபெற்றிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் சிவன் சிலை மற்றும் 3 மண்டபம் அமைப்பதற்காக 1 லட்சம் சதுர அடி அளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் பழங்குடியின பாதுகாப்பு சங்கத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அப்போது உரிய அனுமதியின்றி, ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அங்கீகாரமற்றக் கட்டடத்துக்கு அபராதம் வசூலிக்காததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தைத் தாக்கல் செய்ய ஈஷாவிடம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மதவழிபாட்டை கருத்தில் கொண்டு 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை மாற்ற 2016 அக்.8, 2017 பிப்.15-ல் கோவை ஆட்சியர் அனுமதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வழக்கு நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com