எங்கே சமூக விலகல்? உணவுக்காக இடித்துக்கொண்டு நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..!
சமூக விலகல் குறித்து எந்த அச்சமும் இல்லாமல், உணவுக்காக ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நிற்கும் இளைஞர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதல் அடுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதில் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் மக்கள் வேளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் வீட்டில் இருத்தல், சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கொரோனா குறித்த விழிப்புணர்வு வழிமுறைகளும் அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.இருப்பினும் இன்னும் சில இடங்களில் மக்கள் கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் வீதிகளில் உலா வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியும் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா குறித்தும் சமூக விலகல் குறித்தும் விழிப்புணர்வு இல்லாமல், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள, அரசு முகாமில் புலம் பெயர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உணவுக்காக நீணட வரிசையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நிற்கின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக விலகல் குறித்த விவாதத்யையும் எழுப்பியுள்ளது.