ஓ.பி.எஸ். தலைமையிலான `செயல்வீரர்கள் கூட்டம்’ ரத்து! சசிகலா - தினகரன் விவகாரம் காரணமா?

ஓ.பி.எஸ். தலைமையிலான `செயல்வீரர்கள் கூட்டம்’ ரத்து! சசிகலா - தினகரன் விவகாரம் காரணமா?
ஓ.பி.எஸ். தலைமையிலான `செயல்வீரர்கள் கூட்டம்’ ரத்து! சசிகலா - தினகரன் விவகாரம் காரணமா?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் பெரியகுளத்தில் நாளை நடைபெறவிருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் ரத்தாகியுள்ளது.

முன்னதாக சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித் தனியாக நேற்று ஆலோசனை நடத்தியிருந்தனர். ஏற்கெனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சியில் குரல் எழுப்பப்பட்டு வந்தது. உதாரணத்துக்கு கோவையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ''ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள். தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம் தொய்வுற்று இருக்கிறது. 4 வருடத்திற்கு முன்பே உள்ளாட்சித்தேர்தலை நடத்தியிருந்தால் அதிமுக வென்றிருக்கும். அதை விட்டுவிட்டார்கள்.

எனவே, சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைந்து கட்சியை வழிநடத்தினால் தான் அதிமுக தொய்வில்லாமல் வளரும். பெரியகுளத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும். கடந்த இரண்டு முறை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால், இம்முறை எனக்கு வாய்ப்பு தரவில்லை. என்னுடைய இந்த கருத்தில் எந்தசுயநலமும் இல்லை'' என்று தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர், சசிகலாவை அதிமுகவில் இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி தலைமை கழக அலுவலகத்தின் முன்பு குவிந்ததும் குறிப்பிடத்தக்கது. மாறுபட்ட இக்கருத்துகளுக்கு இடையே, ஓ.பி.எஸ். நடத்த இருந்த கூட்டம் ரத்தாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com