பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறையா? உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேள்வி

பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறையா? உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேள்வி
பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறையா? உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேள்வி

பணம் இருப்பவர்களுக்குத்தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடி காவல்துறையினர் மணல் மாஃபியாகளுக்கு தான் பாதுகாப்பா?. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பின்பும் தூத்துக்குடி போலீசார் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவில்லையா என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுகிறது என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே உயர் நீதிமன்றம் சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு தொடர்ந்திருந்த மனுதாரர் பாலகிருஷ்ணன், மனுவை திரும்ப பெற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர், மனுதாரருக்கு கொலை மிரட்டல் உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காணொலி வாயிலாக ஆஜராகி, வழக்கு குறித்து விளக்கம் அளித்தார். அதேபோல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மனுதாரர் கொலைமிரட்டல் தொடர்பாக அளித்த புகாரில் உண்மை தன்மை இல்லை என்பதால் புகாரை முடித்து வைத்து அவர் இருக்கும் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள்," மணல் கொள்ளை குறித்து வழக்கு தொடர்ந்த மனுதாரரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் மனுதாரருக்கு ஏன் போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை? என கேள்வி எழுப்பினர். நீதிமன்றம் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதன் மூலம் காவல் துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

பொதுவாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை என்றாலே, மக்கள் மனதிலிருந்து இன்னும் வடு அகற்றப்படவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்தும், தூத்துக்குடி மாவட்ட காவக்துறையினர் தங்களின் போக்கை மாற்றவில்லை. இவ்வாறு உள்ள சூழலில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டால் தூத்துக்குடி காவல்துறையினரோ, மணல் கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பாக செயல்பட்டு வருகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்? நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மீறுவதற்கு எவ்வளவு தைரியம்? என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனுதாரருக்கு உடனடியாக காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com