அரசியலுக்கு வருவது குறித்து பேசிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும்போது அறிவிப்பேன். செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க இருக்கிறேன். அரசியலுக்கு வந்தால் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பேன் என தெரிவித்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்து வந்த ரஜினி கடந்த மாதம் 15ம் தேதி முதல் 5 நாட்களுக்கும் மேலாக சந்தித்தித்தார். அப்போது ரசிகர்களுடன் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க அவகாசம் உள்ளது. விரைவில் போர் வரும் என அவர் தெரிவித்திருந்தார். அவர் இவ்வாறு கூறியதால் விரைவில் அரசியலில் குதிப்பார் என பலரும் கூறி வந்தனர். அதனை அடுத்து சில அரசியல் தலைவர்களுடன் அவர் ஆலோசனை கேட்டதாக கூறப்பட்டது. பின்னர் காலா படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்ற போது, நடிப்பது எனது வேலை என்னை வேலையைச் செய்ய விடுங்கள் என்றார். சில தினங்களுக்கு முன் இந்துமக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தை சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ரஜினி அரசியலுக்கு சிங்கமாக வருவார்.. சிங்கிலாக வருவார்’ எனத் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, ’அரசியலுக்கு வந்தால் அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பேன்’ என கூறியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.