திமுக-வில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கத்துக்கு காரணம், அவரது இந்த விமர்சனம்தானா?

திமுக-வில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கத்துக்கு காரணம், அவரது இந்த விமர்சனம்தானா?
திமுக-வில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கத்துக்கு காரணம், அவரது இந்த விமர்சனம்தானா?

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுகவில் செய்தி தொடர்பு செயலாளராக இருப்பவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இடம் நெருக்கமாக இருந்தவர் இவர். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுக நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்ளாத நிலை காணப்படுகிறது. அத்துடன் கட்சி பணிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வருகிறார். ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது கருத்தை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த வரலாற்று நிகழ்வுகளை கே.எஸ் ராதாகிருஷ்ணன் வார இதழ் பத்திரிகை ஒன்றிற்கு பகிர்ந்து கொண்ட கட்டுரை நேற்று வெளியானது.

கே.எஸ் ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட தகவலாக வெளிவந்த கட்டுரையில், “காங்கிரஸ் தலைவர் தேர்தலை சற்று பின்னோக்கி வரலாற்றுரீதியாகப் பார்த்தால், 1938–ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜியும், பி.பட்டாபி சீதாராமய்யாவும் போட்டியிட்டனர். அதில் நேதாஜி வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக 1950–ல் புருஷோத்தம் தாஸ் தாண்டன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெ.பி.கிருபளானியும் போட்டியிட்டனர்.

மூன்றாவது முறையாக 1997–ல் சீதாராம் கேசரி, சரத் பவார், ராஜேஷ் பைலட் ஆகிய மூவரும் போட்டியிட்டபோது, சீதாராம் கேசரி வெற்றிபெற்றார். சீதாராம் கேசரியும் தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க முடியாமல், சோனியாவின் ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதங்களையெல்லாம் அன்றைக்குப் பத்திரிகைகள் வெளியிட்டன. சீதாராம் கேசரியை செயல்படவிடாமல் தடுத்து, அவரைத் தரம்தாழ்த்தி நடத்திய நடவடிக்கைகளெல்லாம் செய்திகளாக வந்தவண்ணம் இருந்தன.

நான்காவது முறையாக, 2000–ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியாவும், ஜிஜேந்திர பிரசாத்தும் போட்டியிட்டனர். சோனியா வெற்றிபெற்றார் என்று அவர் பகிர்ந்து கொண்டதாக வெளியாகி உள்ள கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற நேதாஜியை, தலைவராகச் செயல்படவிடாமல் ஆக்கியதெல்லாம் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களாக இருக்கின்றன” என்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியதாக அந்த கட்டுரை வெளிவந்துள்ளது.

மேலும் “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற சிலர் தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. தகுதியுள்ள சிலர், சில காரணங்களால் தேர்தலில் தோல்வியைத் தழுவவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அரசியலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, நேர்மை மட்டுமல்ல, அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன என்பதையே எனது 52 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் சொல்கிறது” என்றும் கே எஸ் ராதாகிருஷ்ணன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து கே.எஸ் ராதாகிருஷ்ணனின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.

- எம்.ராஜேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com