பள்ளி மாணவர்களின் தரவுகள் முறைகேடாக விற்பனை? சைபர் க்ரைமுக்கு செல்கிறது வழக்கு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் தரவுகள் முறைகேடாக விற்பனை? சைபர் க்ரைமுக்கு செல்கிறது வழக்கு!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கின்றது. அந்த விவரங்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அந்த விவரங்கள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுவாக தங்கள் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க விரும்பும் நிர்வாகங்கள், இத்தகைய விவரங்களை சேகரித்து மாணவர்களை தொடர்பு கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறிய ஒரு கும்பல், ‘6 லட்சம் மாநில பாடத்திட்ட மாணவர்களின் விவரங்களும், 35,000 சிபிஎஸ்சிஇ பள்ளி மாணவர்களின் விவரங்களும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது. ரூ.10,000 Gpay செய்தால் மின்னஞ்சலில் உடனடியாக 20 மாவட்டங்களைச் சார்ந்த அப்பள்ளி மாணவர்களின் விவரங்களை தர தயாராக இருக்கிறோம்’ எனக்கூறியதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் விவரங்களை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி ‘அனைவருக்கும் கல்வி’ திட்ட மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையிலும் ஆடியோ ஆதார அடிப்படையிலும் புகார் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்கீழ் நடந்த விசாரணையில், இந்த கும்பல் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை, ஆன்லைன் மூலமாக பணம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இவ்வாறு பள்ளி மாணவர்கள் தகவல்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் வகையில் நடக்கும் இந்த தகவல் திருட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களின் தகவல் விற்பனை செய்யப்படுவதால், மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் இவ்வழக்கை விசாரிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com