தடாகம் செங்கல்சூளைகளால் இயற்கை சீரழிவா? - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு

தடாகம் செங்கல்சூளைகளால் இயற்கை சீரழிவா? - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு
தடாகம் செங்கல்சூளைகளால் இயற்கை சீரழிவா? - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள செங்கல்சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து நாளிதழொன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக்கொண்டு, சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது.

விசாரணையின்முடிவில் செங்கல்சூளையின் அதிகப்படியான சுரண்டலால் அப்பகுதியில் இயற்கை சீரழிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் தெரிவித்திருக்கும் பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக இதற்குமுன் அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்துக்கும் அதிகாரிகள் காதை மூடிக்கொண்டிருந்துள்ளனர் என காட்டமாக குற்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்தியகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “நாளிதழ் செய்தியை பார்க்கும்போது தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள செங்கல்சூளைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த எந்த விதிமுறையும் இல்லை என்றே தெரிகிறது. விதிமுறை ஏதுமில்லாததால் அனுமதி இல்லாத செங்கல்சூளைகளை அங்கே உருவாக்கி, பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு மண்வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும், சூளைகளை ஒழுங்குபடுத்த அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத்ததால், அதிகப்படியான சுரண்டலால் இயற்கை தொடர்ந்து அப்பகுதியில் சீரழிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. அளிக்கப்பட்ட புகாருக்கு அதிகாரிகள் காதை மூடிக்கொண்டிருந்துள்ளனர்” என காட்டமாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்ற பெரும்பாலான செங்கல்சூளைகளில் அறிவியல்பூர்வமாக எந்த வசதியும் இல்லாமல் இருப்பதாலேயே காற்று மாசு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், தடாகம் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், அங்குள்ள செயல்பாடுகளை எப்படி முறைப்படுத்தலாம் என்பதை தெரிவிக்கவும் குழு அமைத்து உத்தவரவிட்டுள்ளனர். அந்தக் குழுவில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், புவியியல், கனிமவளத்துறையில் தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அந்தப்பகுதியை ஆய்வு செய்து அங்குள்ள நிலவரம்; விதிமீறல் இருந்தால் அதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன; அங்குள்ள தற்போதைய நடவடிக்கைகளால் அருகில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், நீரோடைகள் என ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா; அறிவியல்பூர்வமற்ற நடவடிக்கை களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதா என்பதையெல்லாம் அறிக்கையாக அளிக்கவும், அந்தப்பகுதியில் வணிகரீதியாக மண் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, அதிகப்படியான கனிமவள கொள்ளையை தடுக்க கனிமவளத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, கனிமவளத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் நீதிபதிகள் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை இயற்கைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது எந்தவிதமான பாதிப்பு என்பதையும், அதை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் இந்தக் குழு தெரிவிக்க வேண்டுமென்றும், பாதிப்பு ஏற்பட காரணமானவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகையை வசூலிப்பதற்கான கணக்கீட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் - வனத்துறை செயலர், தொழில்துறை முதன்மைச் செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், புவியியல் - கனிமவளத்துறை ஆணையர், கோவை மாவட்ட ஆட்சியர், ‘சின்னதடாகம், எண்.24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் பன்னிமடை கிராம பஞ்சாயத்து’களின் செயலர்கள் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தடாகம் பள்ளத்தாக்கு பல்லுயிர் சூழலுக்கு முக்கியமான பகுதியாகும். முன்னதாக அனுமதியின்றி செயல்படும் செங்கல்சூளைகளால் யானை வழித்தடம், பல்லுயிர் சூழல் பாதிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற செங்கல்சூளைகள் இயக்கம் தடை செய்யப்பட உத்தரவிடப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது. இந்நிலையில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஐஸ்வர்யா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com