கோவை: பாசி நிதி நிறுவன பெண் அதிகாரி மிரட்டப்பட்ட வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் ஆஜர்

கோவையில் பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டிய வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார்
ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார்pt web

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதலில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்), குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து, கடந்த 2022 ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக, ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி., பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன் என்கிற அண்ணாச்சி, திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி கோவிந்தராஜன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர, மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒரு வார காலம் அவகாசம் வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். அதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர மோகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், ஏற்கெனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிரமோத்குமார் ஆஜராகாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இதைத்தொடர்ந்து, கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தற்போது கரூரில் உள்ள செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை கைது செய்து, அக்டோபர் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜி-க்கு உத்தரவிட்டார்.

அதேசமயம் கடந்த 2010 ஆம் ஆண்டு பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை கடத்தி மிரட்டி பணம் பறித்ததாக அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி., யாக இருந்த பிரமோத் குமார் மீது புகார் எழுந்தது. தமிழக அளவில் காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதால் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com