ஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..?
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருப்பது ஐபிஎல். உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இதை பார்க்க அளவில்லா ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கான புதிய வீரர்களை ஏலத்தில் எடுப்பது வழக்கம். அந்த வகையில 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள் குழு பங்கேற்கவுள்ளனர். ஐபிஎல் போட்டியின் ஏலத்திற்காக மட்டும் மொத்தம் 997 வீரர்கள் பதிவு செய்திருந்தார்கள். இதில் 337 வீரர்கள் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டனர். இதில் 186 இந்திய வீரர்களும், 143 வெளிநாட்டு வீரர்களும், மேலும் மூன்று பேர் இணை நாடுகளை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர்.
வீரர்களின் விலை மதிப்பு அதிகபட்சம் ரூ.2 கோடியாகவும், குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாகவும் பட்டியலிடப்பட்டது. இதில் அதிகபட்ச விலயான ரூ.2 கோடி மதிப்பில் தேர்வு செய்யப்பட்ட 7 வீரர்களுமே வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தான். ஆஸ்திரேலியவை சேர்ந்த பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹஸ்ல்வுட், கிரிஸ் லின், மிட்ஜெல் மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும், தென்னாப்பிரிக்காவை டேல் ஸ்டினும் மற்றும் இலங்கை சேர்ந்த ஏஞ்சலோ மேத்தீவ்ஸும் இந்த விலையை பிடித்தார்கள்.
இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவைச் சேர்ந்த ராபின் உத்தப்பா ரூ.1.5 கோடி மதிப்பிலும், பியூஸ் சாவ்லா, யூசுஃப் பதான், ஜெயதேவ் உனாட்கட் ஆகியோர் ரூ.1 கோடி மதிப்பிலும் பட்டியலிடப்பட்டனர். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிகமான விலைக்கு ஏலம் போனது இந்திய வீரர்கள் தான். ஆனால் இந்த முறை ஏலப்பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட அதிகபட்ச தொகைக்கு பட்டியலிடப்படவில்லை. இதற்கு காரணம் போன முறை, அதிக விலையில் வாங்கப்பட்ட இந்திய வீரர்கள் யாருமே சரியாக விளையாடவில்லை என ஐபிஎல் வாட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த முறை இந்தியாவை சேர்ந்த பந்துவீச்சாளரான உனாட்கட் ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில எடுக்கப்பட்டார். இதேபோல தமிழகத்தை சேர்ந்த வீரரான வருண் சக்கரவர்த்தியும் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனார். ஆனால் இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் மோசமான ஒரு பந்துவீச்சை வெளிப்படுத்தியதால், அதிக போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. இதேபோல ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்ட மோகித் ஷர்மா, ரூ.4.80 கோடிக்கு வாங்கப்பட்ட முகமத் ஷமி, ரூ.2.40 கோடிக்கு வாங்கப்பட்ட வருண் ஆரோன், ரூ.1.2 கோடிக்கு வாங்கப்பட்ட சாஹா, ரூ.1.1 கோடிக்கு வாங்கப்பட்ட இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோரும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் இந்திய மண்ணுல அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதனால் இந்தியர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் தங்கள் மவுசையே இழந்துள்ளனர். இருந்தாலும் மறுபடியும் 2020 ஐபிஎல் போட்டியில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும், தங்கள் மவுசை இந்திய வீரர்கள் பிடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் இருக்கின்றனர்.