"தமிழக எல்லையில் கழிவுகளைக் கொட்டிய மருத்துவமனைகளை ஏன் மூடக்கூடாது?" - பசுமை தீர்ப்பாயம் கேள்வி
தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள், மற்றும் உணவுக் கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏன் அவற்றை மூடக்கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில், நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில், கேரள மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழக பகுதியில் கேரள அரசு மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது.
“கேரளாவில் இருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு ஆகும் செலவை கேரள மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும்” என அப்போது தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கேரளா மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து கேரள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை கேரள மாநில உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததாக தெரிவித்தார். கழிவுகளை கொட்டிய சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கும் ரிசார்ட்க்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இது கண்துடைப்பு நடவடிக்கை என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், கழிவுகள் கொட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகநாதன், கேட்டுக்கொண்டார். விசாரணையின்போது கடந்த நான்கு ஆண்டுகளாக இதுபோல் நடப்பதாக தீர்ப்பாய உறுப்பினர் சத்யகோபால் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் வழக்கை 20 ம் தேதி ஒத்திவைத்தார். கேரளா அரசு கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும், தமிழக அரசு மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.