குட் நியூஸ் | சென்னை ஐஐடியில் கலை மற்றும் கலாச்சார பிரிவிற்கான மாணவர் சேர்க்கை அறிமுகம்!
செய்தியாளர் பால வெற்றிவேல்
நாட்டில் உள்ள ஐஐடிகளில் முதல்முறையாக கலை மற்றும் கலாச்சார பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தேசிய அளவில் விருதும் அங்கீகாரமும் பெற்ற நடனம் இசை ஓவியம் கிராமிய கலைகளில் தேர்ந்த மாணவர்கள் சிறப்பு பிரிவு மூலம் ஐஐடிக்குள் நுழையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி 1959 ஆம் ஆண்டு முதல் கிண்டி தேசிய பூங்காவில் செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை ஐஐடியில் தங்கள் பிள்ளைகளும் பயில வேண்டும் என்பது இங்குள்ள பெரும்பாலான பெற்றோர்களின் கனவாக உள்ளது.
ஆனால் ஐஐடியில் பயில வேண்டும் என்றால் முழுமையாக கற்றல் திறனை மட்டுமே மேம்படுத்த வேண்டும் என்கிற நிலை இவ்வளவு நாட்களாக இருந்தது ஆனால் விளையாட்டு, கலை போன்ற பிரிவிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த கல்வியாண்டில் விளையாட்டு துறைக்கான மாணவர் சேர்க்கை பிரிவு தனியாக உருவாக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவிற்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
2025-26 கல்வி ஆண்டு முதல் பி டெக் மற்றும் பி எஸ் பாடத்திட்டங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா இரண்டு இடங்கள் வீதம் கலை மற்றும் கலாச்சார பிரிவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில்,
”மத்திய அரசின் பால் புரோஸ்கர் விருது, பால் ஸ்ரீ விருது, இளைஞர் விருது மத்திய கலாச்சார துறையின் விருதுகள், மத்திய ஒளிபரப்பு துறையின் தூர்தர்ஷன் அல்லது ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட ஊடகங்களில் அரங்கேற்றம் நடத்தி சான்றிதழ் வாங்கியவர்கள் அடுத்த வருடம் ஜெஇஇ சேர்க்கையில், நுண் கலை மற்றும் கலாச்சார மாணவர் சேர்க்கையில் பங்கேற்க தகுதியுள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். இதனால், பரதநாட்டியம் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, ஓவியம் நாடகம், புகைப்படக் கலைஞர்கள் ஐஐடியின் FACE என்கிற இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள முடியும். செவ்வியல் கலைகள் மட்டுமின்றி கிராமப்புற கலைகளுக்கான தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்றவர்களும் ஐஐடியில் படிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது” என்று கூறுகிறார்.
கணினி தொழில்நுட்பம், கட்டடக்கலை மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் போன்ற 14 பொறியியல் பிரிவுகளில் ஆண்டுக்கு இரண்டு சீட்டுகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகளையும் உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில்,
”அடுத்த கல்வியாண்டு முதல் கலை மற்றும் கலாச்சார மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் கலையின் பால் ஈர்ப்பும் திறனும் கொண்ட மாணவர்களும் ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும் . இளையராஜா இசை மற்றும் பண்பாட்டு மையம், ஏ ஆர் ரகுமான் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், மெய்நிகர் காட்சி மற்றும் ஒளி பொறியியல் தொடர்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னை ஐஐடியில் அதிகரித்து வரும் நிலையில் கலை மாணவர்களின் வரவு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் ” என்று கூறுகிறார்.