அதிரடி நீக்கம்.. உறுதியான முடிவு| ஜெ., பாணியை கையிலெடுக்கும் பழனிசாமி.. அதிமுகவுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக தற்போது இருக்கும்போதும் அதிக அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறது பழனிசாமி தலைமையிலான அதிமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொட்டு பழனிசாமி வெர்சஸ் அதிருப்தியாளர்கள் என்ற கோணத்தில்தான் விவாதங்கள் முடிவில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றன.
பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரன் வரிசையில் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறார் செங்கோட்டையன். செப்டம்பர் 5 ஆம் தேதி கோபியில் அவர் கொடுத்த பேட்டி தொடக்கம்தான் என்றாலும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி ஓபிஎஸ் உடன் வாகனத்தில் வந்தது, டிடிவி உடன் பேட்டி கொடுத்தது, காத்திருந்து சசிகலாவை சந்தித்தது, இந்த நிகழ்வுகளின் விளைவாக அடுத்த நாளே அவரை பழனிசாமி நீக்கியது இவையெல்லாம் இந்த விவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தன்னை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் அதிரடியாக முடிவு எடுத்து நீக்கிக் கொண்டே வருகிறார் பழனிசாமி. இது, ஜெயலலிதா பாணியை பின்பற்றி துணிச்சலுடன் பழனிசாமி முடிவெடுக்கிறார், தன் மீது அவர் முழு நம்பிக்கை வைத்து செயல்படுகிறார் என்று ஒருபுறம் பாசிட்டிவ் ஆக பேசப்பட்டாலும், மறுபுறம் கட்சியின் பின்னடைவிற்கே அவரது அதிரடி முடிவுகள் காரணமாக அமையும் என்று விமர்சிப்பவர்களும் கூறுகின்றனர். இதுகுறித்து அரசியல் விமர்சகர் கோட்டீஸ்வரன் அளித்த விரிவான பதில்களை பார்க்கலாம்..
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ச்சியாக சசிகலா, செங்கோட்டையன், ஓ. பன்னீர் செல்வம் போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியது போன்றவை மூலம் ஜெயலலிதா பாணியை பின்பற்றி அதிமுகவில் தனித்த ஆளுமையாக இருக்கிறார் என்ற கருத்து ஒரு பக்கம் நிலவி வந்தாலும், இன்னொரு பக்கம் கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில், பழனிசாமி எடுக்கும் இந்த முடிவுகள் அதிமுக-விற்கு சாதகமா அல்லது பாதகமா ?
அதிமுக திமுகவை எதிர்ப்பது என்பதுதான் அந்த கட்சியின் தன்மை. தொடர்ந்து, ஒரு கட்சியை தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள் மற்றும் மக்கள் அந்த கட்சியை எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதிமுகவை பொறுத்தவரை மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்குவது கட்சிக்கு நல்லதல்ல எனப் பொதுவாக பேசப்பட்டு வந்தாலும், பெரும்பாண்மையான தொண்டர்கள் பழனிசாமி பக்கமே இருப்பதாக தெரிகிறது. இரண்டாவதாக, தேர்தல் என்று வரும்போது மக்கள் எப்படி அதிமுகவை பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். என்னதான் ஊடகங்களில் அதிமுக-வின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ஒருவேளை இரட்டை இலை என்ற சின்னத்துக்கு மக்கள் வாக்களித்து விட்டால் பழனிசாமியின் கை ஓங்கும். அப்படி வாக்களிக்கவில்லை என்றால் இந்த விமர்சனங்கள் தீவிரமடையும். இது மேலும் சில சிக்கல்களை அதிமுக-விற்கு உருவாக்கும்.
ஏற்கனவே, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. ஆனால், அப்போது தோல்வியடைந்ததற்கு, ஜெயலலிதா மரணம், 10 வருடம் ஆளுகின்ற கட்சி போன்ற பல காரணங்கள் இருந்தன. அதனால், அன்று அதிமுக தோற்றதிற்கு முழு காரணம் பழனிசாமி என்று சொல்லிவிட முடியாது. ஆனால், 2026 ஆம் ஆண்டு தோற்றால் அதற்கு முழு காரணம் பழனிசாமி தான்.
பழனிசாமி தன்னால் உறுதியாக செய்யமுடியும் என்று நினைக்கிறா?
பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன் போன்றவர்களை போல செய்தியாளர் சந்திப்பில் மட்டும் அவர் அரசியல் செய்யவில்லை. பழனிசாமி கட்சிக்காரர்களை நேரடியாக சென்று சந்திக்கிறார். 150 தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். மேலும், பொதுக்குழுக்களை கூட்டி நிர்வாகிகளை சந்திக்கிறார். மேலும், திமுக தீர்க்கமாக எதிர்ப்பது பழனிசாமியைத் தான். தொடர்ந்து, ஜெயலலிதா பாணியில் நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மேலும், மக்களை சந்திக்கும் அரசியலை பழனிசாமி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு, சசிகலா, ஓ.பி.எஸ் தேர்தல் பணிகளை தொடங்காத போது, தன்னை முழுமையாக நம்புவதன் மூலம் ஆறு மாதத்திற்கு முன்பே பேருந்து எடுத்துக் கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். யாரும் ஜெயித்துக் கொடுப்பார்கள் என அவர் நம்பவில்லை.
செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரது பழனிசாமிக்கு எதிரான பேச்சுகளில் பாஜகவின் சாயல் தெரிகிறது. மறைமுகமாக பாஜக பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறதா?
பாஜக தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிமுக, திமுக உட்பட. உதாரணமாக, அதிமுக-வில் மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணமே பாஜகதான். செங்கோட்டையனை அழைத்து அமித் ஷா வை பார்க்க வைத்தது. ஓ.பி.எஸ் அழைத்து பார்க்க வைத்தது போன்றவற்றை கூறலாம். அவ்வாறு பழனிசாமிக்கும் அழுத்தங்கள் இருக்கலாம். ஆனால், அவர் அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு இருப்பவர் அல்ல. ஏற்கனவே அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அண்ணாமலையின் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதற்கு காரணமும் பழனிசாமி என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு ஒரு பிரச்சனை வரும்போது நிச்சயம் கூட்டணியை விட்டு வெளியேறுவார். ஜெயலலிதா பாணியில் செல்வதில் உறுதியாக இருக்கிறார் பழனிசாமி.
தென் மாவட்டங்களின் வாக்குகள் போன்றவற்றை டிடிவி தினகரன் போன்றவர்கள் எடுக்கிறார்கள், அதனை கே. பழனிசாமி முறியடிப்பாரா ?
தமிழகத்தின் அரசியலை நான்கு பிரிவுகளாக பிரித்துதான் பார்க்க வேண்டும். வட மண்டலம், கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள். ஆனால், இவர்கள் கூறுவது தென் மாவட்டங்களில் அதிமுக தோற்றுவிடும் என்று கூறுகிறார்கள். அப்போது, மற்ற மண்டலங்களில் அதிமுக வலிமையாக இருக்கிறதா? எல்லா இடங்களிலும் பிரச்சனை இருக்கிறது. டிடிவி தினகரன் செய்வது சாதி அரசியல் போல இருக்கிறது. இந்த அரசியல் அதிமுகவிற்கு நல்லதல்ல. மேலும், டிடிவி தினகரன் போன்றவர்களும் தென் மாவட்டங்களில் வெற்றி பெறுவதில்லை. பழனிசாமி தனியாக இருந்து தோற்கிறார். அவர்கள் ஒன்றாக இருந்து தோற்கிறார்கள். ஆனால், பழனிசாமியிடம் மக்களிடம் சென்று சேர்ந்த இரட்டை இலை சின்னம் இருக்கிறது. திமுகவை விட 10 வருடம் அதிமுக அதிகமாக ஆட்சியில் இருந்ததற்கு காரணம் அந்த சின்னம். பழனிசாமி அந்த சின்னத்தை வைத்து என்ன பழனிசாமி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

