ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் - அண்ணாமலை
செய்தியாளர்: மா.மகேஷ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...
உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி கேட்டுள்ள 14 கேள்விகள் நியாயமானது:
உச்ச நீதிமன்றத்திற்கும், ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் என தனித்தனி அதிகாரம் உள்ளது. இந்திய ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது கேட்டுள்ள 14 கேள்விகள் நியாயமானது. அவர் கேட்ட கேள்விகளில் எவ்வித தவறும் இல்லை. இந்தியாவில் இதுவரை இருந்த ஜனாதிபதிகள் 15 முறை ஆர்டிகல் 143-ஐ பயன்படுத்தி கேள்வி கேட்டுள்ளனர். இது 16 வது முறை ஜனாதிபதி கேட்டுள்ள கேள்வி.
அப்போது இனித்தது இப்போது கசக்கிறதா?
1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு 25 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி ஆர்டிகள் 143ஐ பயன்படுத்தி போராடி தமிழ்நாட்டிற்கு 25 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்ளும் அரசு தற்பொழுது ஆர்டிகல் 143ஐ பயன்படுத்தி ஜனாதிபதி 14 கேள்விகளை கேட்டிருப்பது குறித்து தமிழக முதல்வர் மக்களை திசை திருப்பும் வகையில் நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல அப்பொழுது இனிக்கிறது தற்பொழுது கசக்கிறதா.
ஓபிஎஸ் எப்பொழுதும் எங்களோடு தான் உள்ளார்:
இபிஎஸ், ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எல்லோரும் எங்களுடன் தான் உள்ளார்கள் யாரும் எங்களை விட்டு பிரிந்து செல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. ஓபிஎஸ் எப்பொழுதும் எங்களோடு தான் உள்ளார். பிரதமர் மோடி இதயத்தில் தனி இடத்தில் வசித்து வருகிறார் என்றவரிடம், தேசிய அளவில் அண்ணாமலைக்கு பதவி கிடைக்குமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,,
குழந்தையாகவும், தந்தையாகவும் மகனாகவும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்:
"தற்பொழுது நான் நிம்மதியாக இருக்கிறேன். ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன். ஒருபுறம் கட்சிப் பணிகளை அவ்வப்போது செய்து வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். தேவையில்லாத எந்த வேலையிலும் சிக்காமல் சந்தோஷமாக இருக்கிறேன். குழந்தையாகவும், தந்தையாகவும் மகனாகவும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுவே சிறப்பாக உள்ளது. தற்பொழுது தான் கூண்டுக் கிளியாக நிம்மதியாக இருக்கிறேன் என்றும் நமக்கான காலம் வரும் பொழுது பறப்போம்" என்று அண்ணாமலை கூறினார்.