சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்,
சாலை மறியலில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை விட 2009 ஆம் ஆண்டுக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து சமவேலை, சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பள்ளிக்கல்வி துறை அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர், அவர்களை கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். நள்ளிரவில் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாத ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முழுவதும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.