சாதிமறுப்பு திருமணம் செய்ததற்காக 39 ஆண்டுகளாக ஒதுக்கி வைப்பதா? இனியாவது தீர்வு கிடைக்குமா?

சாதிமறுப்பு திருமணம் செய்ததற்காக 39 ஆண்டுகளாக ஒதுக்கி வைப்பதா? இனியாவது தீர்வு கிடைக்குமா?
சாதிமறுப்பு திருமணம் செய்ததற்காக 39 ஆண்டுகளாக ஒதுக்கி வைப்பதா? இனியாவது தீர்வு கிடைக்குமா?

சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கோயில் திருவிழாவிற்கு கூட வரி வசூல் செய்யாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் துயரம் தொடரும் நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது நீதிமன்ற தலையிட்டு இருப்பதால் இனியாவது தங்களுக்கு தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் தங்கள் குடும்பம் உட்பட 25 குடும்பங்களிடம் கோயில் திருவிழாவிற்கான வரி வசூல் செய்யாமல் தங்களை புறக்கணிப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த வேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இதுகுறித்து வருவாய் துறையின் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் தலைகட்டு வரி வசூல் செய்து அவர்களையும் திருவிழாவில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், நாம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது சாதிமறுப்பு திருமணம் செய்ததால் 39 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குடும்பத்தினரை அந்த கிராமத்தை சேர்ந்த அதே சமூக மக்கள் புறக்கணித்து வருவதும் அதேபோல வழக்கு தொடர்ந்த வேலுவின் குடும்பத்தை 20 ஆண்டுகளாக அந்த கிராமத்தைச் சேர்ந்த அதே சமூக மக்கள் புறக்கணித்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் 900 குடும்ப மக்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த 600 குடும்ப மக்கள் வசித்து வரும் நிலையில் அந்த சமூகத்தை சேர்ந்த வேலு என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை அவர் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் அந்த கிராமத்தில் வசிக்கும் அவரது சமூக மக்கள் கோயில் திருவிழாவிற்கு அவரது குடும்பத்திடம் வரி வசூல் செய்யாமல் அவரை அந்த கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் அவர் தற்போது சொந்த ஊரில் வாழ விருப்பமின்றி புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

இதுகுறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடம் வட்டாட்சியரிடமும் காவல்துறையினரிடமும் புகார் மனுக்கள் அளித்தும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டும் அதில் எந்தவித தீர்வும் தங்களுக்கு கிடைக்காததால் தற்போது நீதிமன்றத்தை நாடியதால் நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அதனை அதிகாரிகள் செயல்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர் வேதனையோடு தெரிவிக்கிறார்.

தங்களைப் போல சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட மற்றும் தங்களிடம் பேச்சுவார்த்தையில் இருந்த 25 குடும்பங்களையும் தங்கள் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் தங்களிடம் திருவிழாவிற்கு வரி வசூல் செய்யாமல் அவர்கள் மட்டும் வரி வசூல் செய்து திருவிழாவை நடத்துவதோடு தங்கள் கிராமத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு தங்கள் குடும்பத்தினரை மட்டும் அழைப்பதில்லை என்றும் அதேபோல் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்விற்கு இதே கிராமத்தைச் சேர்ந்த தங்கள் சமூக மக்கள் வந்துவிட்டாலோ அல்லது பேசிவிட்டாலோ அவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடைமுறை தொடர்ந்து வருவதாகவும் வேலு வேதனையோடு தெரிவிக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக அதே கிராமத்தில் வசிக்கும் 60 வயதை கடந்த பெருமாள்-மீனாள் தம்பதியினரை நாம் சந்தித்தபோது அவர்கள் கூறிய விபரங்கள் நம்மையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

மின்வாரியத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள பெருமாள் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனாள் என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த ஒரு காரணத்தினால் அப்போது முதல் தங்கள் சமூக மக்கள் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும் அதன் பின்பு நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் மன்னிப்பு கோரியபின் பத்தாண்டு காலம் தங்களை ஊருடன் இணைத்து கொண்டதாகவும், ஆனால் அதன் பின்பு மீண்டும் தெய்வ குத்தம் ஆகிவிட்டது என்று கூறி தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகவும் தங்கள் வீட்டிற்கு கூட வேலையாட்கள் வருவதில்லை என்றும் வேதனையுடன் அவர் கூறுகிறார். அப்படியே இதே கிராமத்தைச் சேர்ந்த தங்கள் சமூக மக்கள் வேலைக்கு வந்து விட்டால் அவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை தொடர்கிறது என்றும் தானும் பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளவதோடு காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என பல இடங்களில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லாததால் தற்போது தானும் தனது மனைவியும் தனிமையில் வாழ்வை நகர்த்தி வருவதாகவும் தங்களது இரு மகள்களும் திருமணம் முடித்து சென்றுவிட்ட நிலையில் இந்த கிராமத்தை விட்டு எந்த சூழலிலும் போக கூடாது என்பதால் இங்கேயே வசித்து வருவதாகவும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தாலும் தங்கள் கிராமத்து மக்கள் தங்களை 39 ஆண்டுகளாக புறக்கணித்து வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமான பெருமாள்-மீனாள் தம்பதியினர் வேதனையோடு தெரிவித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் ஜாதி மத பாகுபாடுகள் கடந்து சமத்துவமிக்க வாழ்வை வாழ இன்றைய தலைமுறையினர் ஆயத்தமாகி வரும் அதே வேலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் கிராமத்தில் சாதிமறுபுப்த் திருமணம் செய்து கொண்டதற்காக 39 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த  பெருமாள் குடும்பம் உட்பட பல குடும்பத்தினர் துயரத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையின் உச்சமே. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சட்டத்தால் மட்டும் இதற்கு தீர்வு காண முடியாது அந்த கிராமத்து மக்கள் மனங்களிலும் மாற்றம் வர வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

இது குறித்து வேலு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான பெருமாள் என்பவரிடம் நாம் பேசுகையில், 'தங்களுக்கு பிடிக்காததால் வேலு உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தாங்கள் வரி வசூல் செய்வதில்லை என்றும் அவர்களை கோயிலுக்கு வர வேண்டாம் என்றோ சாமி கும்பிட வேண்டாம் என்றோ தாங்கள் யாரும் சொல்லவில்லை என்றும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் என்று சொல்ல முடியாது என்றும் தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் தங்கள் மக்கள் ஒதுங்கி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com