மாணவர்களுக்கு இயற்கை முறையில் பாடம் - அசத்தும் அரசுப் பள்ளி

மாணவர்களுக்கு இயற்கை முறையில் பாடம் - அசத்தும் அரசுப் பள்ளி

மாணவர்களுக்கு இயற்கை முறையில் பாடம் - அசத்தும் அரசுப் பள்ளி
Published on

கடலாடி அருகே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பனை ஓலையில் கலைப்பொருட்கள் செய்து பிளாஸ்டிக் ஒழிப்பு முறையை பாடத்தில் புகுத்தி அரசுப்பள்ளியில் சிபிஎஸ்இ பாடமுறையை செயல்படுத்தி வருகிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் 21 மாணவ மாணவிகளும் உள்ளனர்.

கடந்த காலங்களில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தும், பிற்படுத்தப்பட்ட இந்தப்பகுதியில் பள்ளிக்கு வருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யவும், பள்ளி மாணவர்களுக்கு இயற்கையான முறையில் பாடங்களை பயிற்றுவிக்கவும் முடிவெடுத்தார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஸ்து ஞானசெல்வன். அத்தோடு மட்டுமில்லாமல் பனைமரங்களின் அழிவை காக்கவும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கவும், இயற்கைப் பொருட்களின் மீது ஈடுபாட்டை அதிகரித்து இயற்கை சார்ந்த விசயங்களை புரியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்  
ஆசிரியர் ஞானசெல்வன்.

இன்றய சூழ்நிலையில் கல்விப்படிப்பை தாண்டி பொது அறிவு சார்ந்த விஷயங்களையும், இயற்கையை நேசிக்கவும் மாணவர்கள் கற்று கொள்ள  முன்வரவேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி வகுப்பறையிலேயே பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார் தலைமை ஆசிரியர். உணவு இடைவேளை உள்ளிட்ட ஓய்வு நேரங்களில் பனையோலையில் மீன், காற்றாடி, ஓலைச்சுவடி, மெழுகுவர்த்தி, புத்தக அடையாள அட்டை, ஓலைக் கடிகாரம் உட்பட பல பொருட்களைச் செய்ய மாணவ மாணவிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொடுக்கிறார்.

இதனால் மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கு தொடர்ந்து வரும் நாட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதைக் காட்டிலும் பனை ஓலை மூலம் உருவங்கள் செய்து அதன் மூலம் பாடம் நடத்துவதால் எளிமையாக புரிகிறது என குதூகலத்துடன் தெரிவிக்கின்றனர் மாணவர்கள். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு தனது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெற்றோர் முத்துராமலிங்கம்  கூறும்போது, “தங்கள் பிள்ளைகளை  தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் அதிகம் செலவு செய்து பள்ளிக்கு அனுப்பியபோது இல்லாத உற்சாகம், தற்போது நரசிங்க கூட்டம் அரசுப்பள்ளிக்கு அனுப்பும்போது ஏற்பட்டுள்ளது. இயற்கை முறையில் பாடம் நடத்தி எளிதில் புரிய வைப்பதால் மாணவர்கள் நன்கு பயில்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என வீடுகளில் பெற்றோர்களான எங்களுக்கும் மாணவர்கள் அறிவுறுத்துவதால் பெரும் மகிழ்ச்சியடைவதுடன் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞானசெல்வம் கூறும்போது:- இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுககு பொழுது போக்கு அம்சமாக செல்போனும் டிவியும்தான் இருந்து வருகிறது. எனவே தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பனை ஓலையைக் கொண்டு  பள்ளி மாணவர்களுக்கு உருவங்கள் செய்ய கற்றுக்கொடுத்து தற்போது அதன் மூலமாகவே தானும் பாடம் நடத்துவதால், எளிதில் புரிவதுடன் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வர நாட்டம் கொண்டுள்ளதாகவும்,  இயற்கையை நேசிக்க கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் பனை மரத்தின் அருமையை தெரிந்து கொண்டு டிவி மற்றும் செல்போன் பயன்பாட்டை குறைத்து கிடைக்கும் நேரங்களில்  வீடுகளிலும் செய்துவருகின்றனர் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் தலைமை ஆசிரியர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com