கண்ணில் காணாத குழந்தை... காதல் மனைவியை இழந்து கலங்கி நிற்கும் ராஜா.. #JusticeForUsha
இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துக் கொண்ட தனது மனைவியை இழந்து வேதனையின் உச்சத்தில் இருக்கிறார் ராஜா.
தஞ்சாவூர் மாவட்டம் சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. 3 மாத கர்ப்பிணியான தனது மனைவி உஷாவுடன் திருச்சியில் உள்ள நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றிருக்கிறார். துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர். வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை துரத்தி சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்திருக்கிறார். இதில் நிலைத்தடுமாறி உஷா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்தனர். அப்போது தலையில் பலத்த காயமடைந்த கர்ப்பிணி உஷா நிகழ்விடத்திலேயே, கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உஷாவை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் ராஜா. சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்வில் ஏற்கெனவே உஷா கருவுற்றபோது கரு கலைந்திருக்கிறது. அப்போது குடும்பமே சோகத்தில் மூழ்க, மூன்று மாதங்களுக்கு முன் உஷா மீண்டும் கர்ப்பமானார். வீட்டிற்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்ற சந்தோஷத்தில் ராஜா, உஷா மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தனிமரமாக மாறியிருக்கிறார் ராஜா. இடியே விழுந்ததுபோன்று கதிகலங்கி நிற்கும் ராஜா, ‘இப்படி இரண்டே ஆண்டுகளில் என் காதல் வாழ்க்கையை முடித்துவிட்டீர்களே’ என மனம் குமுறுகிறார். கர்ப்பிணி மனைவியின் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராஜா, அதுவரை உடலை வாங்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டார். எந்தவொரு நேரத்திலும் என் மனைவிக்கு போல் எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோன்று நிகழக்கூடாது என ராஜா கூறும்போதும் வேதனையின் உச்சத்திலே அவர் இருப்பது அனைவருக்கும் புரியும்.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கிராம மக்கள் ராஜாவின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.