வறுமையால் தற்கொலைக்கு முயன்ற மாணவர் - சொந்த பணத்தை கொடுத்து உதவிய ஆய்வாளர்..!
கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு நிதியுதவி செய்த காவல் ஆய்வாளரை காவல் ஆணையர் நேரில் பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (22). இவர் சென்னை நெற்குன்றத்தில் தங்கி, லயோலா கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக மாணவர் சரவணன், தேர்வு கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. அவரை மீட்ட நண்பர்கள், கோயம்பேடு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணவன் நலமுடன் தங்கியிருந்த அறைக்கு திரும்பினார். இந்த சூழலில் தற்கொலைக்கு முயன்ற மாணவன் சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்த ஆய்வாளர் மாதேஸ்வரன், தேர்வுக் கட்டணம் ரூ.4,000-ஐ வழங்கினார்.
வறுமையில் இருந்த மாணவருக்கு சொந்த பணத்தை கொடுத்து உதவிய ஆய்வாளர் மாதேஸ்வரின் மனித நேயத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஆய்வாளர் மாதேஸ்வரனை நேரில் அழைத்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.