முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

மூன்று மாதங்களுக்கு பின் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வு துவங்கி நடந்து வருகிறது.

முல்லை பெரியார் அணையின் துணை கண்காணிப்பு குழுவினர் தேக்கடியில் இருந்து தமிழக அரசின் கண்ணகி படகு மூலமும் கேரளா அரசின் வனத்துறை வேகப்படவும் மூலமும் முல்லை பெரியாறு அணைக்கு கிளம்பி சென்றனர்.

மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளராக இருந்த சரவணகுமார் பணி மாற்றலானதை தொடர்ந்து அவருக்கு பதிலாக பொறுப்பேற்ற மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் நடக்கும் முதல் ஆய்வு முல்லைப் பெரியாறு அணையில் துவங்கியுள்ளது.

ஆய்வில் தமிழக பிரதிநிதிகளாக தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரளா நீர்ப்பாசன துறை செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவி பொறியாளர் பிரசித் ஆகிய ஐவர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

துணைக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையின் பிரதான அணை பேபி அணை மதகுப்பகுதிகள், சுரங்கப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மலைகளின் இயக்கம் சரிபார்க்கப்படுகிறது. அணையின் சுரங்கப் பகுதியில் இருந்து வழியும் கசிவு நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன் அளவீடும் கணக்கிடப்பட்டு அணையின் பலம் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

கோடை காலம் நெருங்குவதை முன்னிட்டு அணையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், செய்ய வேண்டிய மரமத்துப் பணிகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வுக்குப் பின் ஐவர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கூட்ட அறிக்கை மூவர் கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன் ராஜ்ஜிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதற்கு முந்தைய துணைக்குழு ஆய்வு அக்டோபர் 13ம் தேதி நடந்தது. மூன்று மாதங்களுக்கு பின் முல்லைப்பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு இன்று நடக்கிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி ஐந்தாவது முறையாக 142 அடி ஆக உயர்த்தப்பட்டது.

அதற்குப்பின் அணையில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் ஒரு மாதம் கழித்து தற்போது 15 அடிக்கு மேல் குறைந்து 127.75 அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் கோடையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் நடக்கும் இந்த துணைக் குழுவின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com