“மாற்றம், ஏமாற்றம் Vijay! திருச்சி கிழக்கு தொகுதி எனது ஒரே வருத்தம்..!” - இனிகோ இருதயராஜ் பேட்டி
“விஜய் வெற்றிபெற்றப் பிறகு திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை. குறைந்தபட்சம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த அப்பகுதி மக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தையாவது அறிவித்திருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்யவில்லை” என்று ஆதங்கத்துடன் பேசுகிறார், திருச்சி கிழக்கு முன்னாள் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.
திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கிறார், முதல்வர் விஜய். விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று தி.மு.கவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த நிலையில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும் திருச்சி கிழக்கு தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவுமான இனிகோ இருதயராஜை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சியின் 9 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க, இம்முறை 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதே... தி.மு.க எந்த இடத்தில் கோட்டை விட்டதாக நினைக்கிறீர்கள்?”
“திமுக எந்த இடத்திலும் கோட்டை விடவில்லை. இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சியில், எல்லோரைவிடவும் தளபதி ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து தமிழ்நாட்டை நோக்கி நிறைய தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன. ஒன்றிய அரசின் நிறுவனங்களே தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளது. இதனை நான், திமுகக்காரன் என்பதால் சொல்லவில்லை. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பேசுகிறேன்.
எப்போதுமே மக்கள் நலனை சார்ந்து தி.மு.க இயங்கியதால், சினிமா மோக ரீல்ஸ் மாய உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை முறையாக கண்காணிக்க தவறிவிட்டோம். அதனால்தான், எங்களுக்கு இப்படியொரு தோல்வி ஏற்பட்டுவிட்டது.
ஆனால், ஆட்சி அமைத்த 15 நாட்களிலேயே கள எதார்த்தத்தை மக்கள் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க. கோவை பாலியல் கொடூரத்தில், விஜய் ஆக்ஷன் ஹீரோன்னு நினைச்சு ஓட்டுப் போட்டுட்டோம் என்றார்கள். ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்...’ என ஆட்சியை பிடிப்பதற்கு முன் பாட்டு பாடியிருந்தார், விஜய். ஆனால், பாட்டிலுக்கு பத்து ரூபாய் இன்னும் தொடர்கிறதே! விரைவில், மக்கள் தி.மு.கவின் சாதனைகளை முழுமையாக புரிந்துகொண்டு ஆட்சிமைக்க வைப்பார்கள்!”
“கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை ஒருங்கிணைத்து வைத்திருப்பவர் நீங்கள். அப்படியிருக்க, அந்த வாக்குகள் தற்போது நடந்த தேர்தலில் விஜய்க்கு மாறியுள்ளதே?”
“சிறுபான்மை மக்களும் மக்கள்தானே? அவர்கள் ரீல்ஸ் பார்க்கமாட்டார்களா என்ன? 60 சதவீத கிறிஸ்தவ மக்கள் வசிக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. நீங்க சொல்ற மாதிரி சிறுபான்மையினர் வாக்குகளை விஜய் அதிகமா பெற ஆரம்பித்துவிட்டார் என்றால், த.வெ.க கன்னியாகுமரியில் ஏன் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை?
தூத்துக்குடி. திருநெல்வேலி மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் த.வெ.கவுக்கு 60 சதவீதமும் தி.மு.கவுக்கு 40 சதவீத வாக்குகளும் விழுந்துள்ளன. பொதுவாக, திமுகவிற்கு 80 சதவீதம் அளிக்கக் கூடிய கிறிஸ்தவர்கள் 40 சதவீதம் த.வெ.கவிற்கு அளித்துவிட்டார்கள். மாற்றம் வேண்டும் என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் ஒரு கிறிஸ்தவர் முதல்வர் ஆகப்போகிறார் என்கிற நோக்கத்தில் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆனால், விஜய் தன்னை எப்போது கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக்கொண்டார்? இத்தனை ஆண்டுகள் விஜய் என அடையாளப்படுத்தி நடித்துவிட்டு, இப்போதுதானே ஜோசப் விஜய் என அடையாளப்படுத்திக் கொண்டார்? தேவாலயங்களுக்கு முட்டிபோட்டு சென்று ட்ராமா செய்தார்? இதையெல்லாம் ஏன் முன்கூட்டியே செய்யவில்லை? மணிப்பூரில் தேவாலயங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே பற்றி எரியவைத்தது. பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரமும் நடந்தேறியது.
டெல்லி கலவரத்தின்போது இஸ்லாமிய மக்களின் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. அப்போதெல்லாம், இதற்கு எதிராக குரல் ஜோசப் விஜய் கொடுத்தாரா? ஆனால், தி.மு.க குரல் கொடுத்தது. எங்கே போனார் விஜய்? சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் என அனைவரையும் அரவணைக்கும் உண்மையான சமூக நீதி அரசு தி.மு.க தான். இனி ஆட்சியில் இருக்கும் விஜய்யின் செயல்பாடுகளை பார்த்துதான், அடுத்த தேர்தல்களில் கிறிஸ்தவ மக்கள் வாக்களிப்பார்கள். என்னை பொறுத்தவரை, முதல்வராக விஜயின் 20 நாள் செயல்பாடுகளை மாற்றம்.. ஏமாற்றம்... விஜய்! என்றுதான் சொல்வேன்!”
“கிறிஸ்தவர்கள் ரீல்ஸ் பார்த்து வாக்களித்தார்கள் என்கிறீர்கள். ஆனால், சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள், அவர்களுக்கான உரிமைகள், நலத்திட்டங்களை தி.மு.க ஆட்சியிலுள்ள அதிகாரிகள் செய்யவில்லை என நீங்களே எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்தீர்களே?”
“நான், அப்படி எதிர்ப்பு தெரிவித்தது, விமர்சித்தது எல்லாமே உண்மைதான். ஏனெனில், எனக்கு கிடைத்த ஆட்சி அதிகாரமே தொகுதி மக்களுக்கும் என் கிறிஸ்தவ மக்களுக்கும் நன்மைகளை செய்வதற்காகத்தான். அவர்களின் நலன் எனக்கு முக்கியம்.
நான், அப்படி பேசியதும் தளபதி ஸ்டாலின் உடனடியாக ஒரு குழுவை அமைத்து, எங்களுடைய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்ற ஆரம்பித்தார். 16 இடங்களில் கல்லறை தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. சில கோரிக்கைகள், அதற்கான செயல்பாட்டில் இருந்தன!”
“தி.மு.க சமூகநீதி அரசு, சிறுபான்மை நலன் சார்ந்த அரசு என்கிறீர்கள். த.வெ.க பட்டியலினத்தவருக்கும் சிறுபான்மையிருக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களித்து பாராட்டுகளை குவித்துள்ளதே? இதை ஏன் தி.மு.க ஆட்சியில் செய்யவில்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”
“மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் தி.மு.கவின் கொள்கை. எல்லா கட்சிகளும் அதை தெரிந்துதானே கூட்டணிக்கு வருகிறார்கள்? திருச்சி பேருந்து திருச்சிக்குத்தான் போகும். திருநெல்வேலிக்கு போகாது. இஸ்லாமிய இளைஞர்களால், இந்த முறை இஸ்லாமியர்கள் வாக்கு 30 சதவீதம்தான் த.வெ.கவுக்கு சென்றுள்ளது. 70 சதவீதம் தி.மு.கவுக்கு அப்படியே உள்ளது. அதனால், இஸ்லாமியர்களின் வாக்கு சிதறவில்லை.
பட்டியலினத்தவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என எல்லோருக்கும் எல்லாம் அரசாக தி.மு.க ஆட்சியில் அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சுயாட்சி என்னும் போது எங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்குதானே அமைச்சர் பொறுப்பு கொடுக்கமுடியும்?”
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே? ஒருவேளை ஸ்டாலினுக்கு பதில் உங்களுக்கே மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கொடுப்பார்களா?”
“நான் தலைவர் கலைஞருடன் நேரடியாக பழகியிருக்கிறேன். வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவிக்கவேண்டும். மக்கள் நமக்கு ஓட்டுபோடவில்லை; நன்றியோடு இல்லை என்பதால் அவர்களுக்கான கடமைகளை நிறுத்திக்கொள்ளக்கூடாது என்பது தலைவர் கலைஞர் ஒவ்வொரு தி.மு.க தொண்டருக்கும் சொல்லிக்கொடுத்த பாடம்.
அதனால்தான், கொளத்தூர் தொகுதியில் தலைவர் ஸ்டாலின் தேர்தல் முடிவுக்கு பிறகும்கூட, அம்மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதேபோல்தான், நானும் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி சொன்னேன். எப்படி இப்படி நடந்ததுன்னு வருத்தப்பட்டாங்க. நிறைய பேர் அழுதாங்க.
திருச்சி காந்தி மார்க்கெட் 40,000 தொழிலாளர்கள் பயனடையும் பகுதி. அந்த இடத்தை 50 கோடி ரூபாய் நிதியுதவியில் நாங்கள் சீரமைத்தோம். தொகுதி மக்களுக்கு 250 நடைபாதை காய்கறி கடைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். தொகுதி முழுக்க பெண்களுக்கு தையல் மெஷின் பயிற்சி கொடுத்து சுயமாக முன்னேற வைத்திருக்கிறோம். குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி என அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். என்னுடைய எம்.எல்.ஏ சம்பளத்தை முழுமையாக ஏழ்மையான மாணவர்களின் கல்விக் கட்டணம் செலுத்த தொடர்ச்சியாகப் பயன்படுத்தினேன். நண்பர்களிடம் கடன் வாங்கிக்கூட கட்டண உதவிகளை செய்துள்ளேன்.
இப்படி, நான் எம்.எல்.ஏவாக இருக்கும்போது தினமும் மாலை நேரத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுக் கொண்டிருப்பேன். ஆனால், என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால், விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதியில் 6 மாதங்களுக்கு எம்.எல்.ஏ கிடையாது. இந்த 6 மாதங்களும் மக்கள் யாரிடம் போய் தங்களுக்காக உதவிகளை கேட்பார்கள்?
இது பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரம். ஏழ்மையான மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருப்பார்கள். அதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாக உள்ளது.
அதேநேரம், இந்த ஆறு மாதங்களில் திருச்சி கிழக்கு தொகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் என்னை அணுகலாம். அவர்களுக்கான உதவிகளை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு செய்ய முயற்சிப்பேன்.
மற்றபடி, நான் மீண்டும் போட்டியிடுகிறேனா? இல்லையா? என்பது தலைமை முடிவெடுக்கவேண்டிய விஷயம். அதேநேரம், திருச்சி கிழக்கில் தளபதி ஸ்டாலின் போட்டியிட்டால் உயிரைக் கொடுத்து வெற்றிக்கான பணியில் ஈடுபடுவேன். ஒவ்வொரு தி.மு.க தொண்டரும் அவரது வெற்றிக்காக பாடுபடுவார்கள். தளபதி அவர்கள், திருச்சி கிழக்கில் போட்டியிடவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்!”

