திடீரென உடைந்த அரசு மருத்துவமனை இரும்பு கட்டில்: பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை

திடீரென உடைந்த அரசு மருத்துவமனை இரும்பு கட்டில்: பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை

திடீரென உடைந்த அரசு மருத்துவமனை இரும்பு கட்டில்: பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை
Published on

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், பிறந்த 5 நாள்களேயான ஒரு ஆண் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக அக்குழந்தையை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் பெற்றோர்.

விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமியின் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை எதிர்பாராதவிதமாக அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்துள்ளது. இதனால் கட்டிலிலிருந்த குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்ததாகவும் குழந்தையின் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து விருதுநகர் மருத்துவமனை சார்பில், அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். பெற்றோர் தங்கள் சொந்த நடவடிக்கையில், மேல் சிகிச்சைக்காக குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதனால் குழந்தையை அழைத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து விருதுநகர் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும், தரமற்ற கட்டில் மற்றும் வாகனங்கள்தான் மருத்துவமனையில் இருப்பதாகவும் குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டினர். இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. `குழந்தையும் தாயும் படுத்திருந்த கட்டிலில், தாயையும் சேயையும் நலம் விசாரிக்க வந்த நான்கு பேர் ஒரே நேரத்தில் அமர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என மதுரை மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். இனியாவது மருத்துவமனை தரப்பு நடவடிக்கை ஏதும் எடுக்குமா என்பதே அனைவரின் கேள்வியாகவும் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது. விருதுநகர் மருத்துவமனையிலுள்ள பிற பாலூட்டும் தாய்மார்கள், இந்த சம்பவத்தால் அச்சத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com