ரூ.23.3 லட்சம் கோடியை எட்டிய தங்கக்கடன்! இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்! அதிர வைக்கும் புள்ளிவிவரம்!
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நகைகளை விற்பதற்குப் பதிலாக அடமானம் வைத்து அதிக தொகையைக் கடனாகப் பெறும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அவசரத் தேவைகளுக்கு மட்டுமின்றி, சிறு தொழில்களுக்கான முதலீடு மற்றும் அன்றாடச் செலவுகளுக்கும் மக்கள் தங்கக் கடனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவின் தங்கக்கடன் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
CRIF கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி (Credit Information Services data), 2026 செப்டம்பரில் இந்தியாவின் தங்கக்கடன் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 60.6 சதவீதம் அதிகரித்து ரூ.23.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் மொத்த சில்லறைக் கடன் சந்தையில் 12.6 சதவீதமாகும். அதேபோல், தங்கக்கடன் கணக்குகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து 10.2 கோடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சராசரி தங்கக்கடன் தொகை 32.7 சதவீதம் உயர்ந்து ரூ. 2.2 லட்சமாகியுள்ளது. ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமான கடன்கள் மொத்தக் கடன் மதிப்பில் 67.1 சதவீதத்தைக் கொண்டுள்ளன. தங்கத்தின் விலை உயர்வதால், அதே நகைகளை அடமானம் வைத்து அதிகப் பணம் பெற முடிவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
தென்னிந்திய மாநிலங்கள் தங்கக்கடன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைக் கடனுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக அந்திரப் பிரதேசம் ரூ.3.7 லட்சம் கோடி, கர்நாடகா ரூ.2.4 லட்சம் கோடி, தெலங்கானா ரூ.2.1 லட்சம் கோடி, கேரளா ரூ.1.7 லட்சம் கோடி எனப் பதிவாகியுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களும் இணைந்து நாட்டின் மொத்த தங்கக்கடனில் சுமார் 72 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.
மேலும், 2026-27 நிதியாண்டிலன் இரண்டாவது காலாண்டில் மட்டும், 45.7 லட்சம் பேர் முதல்முறையாகத் தங்கக்கடன் பெற்றுள்ளனர். நிலுவையில் உள்ள தங்கக்கடனில் பெண்களின் பங்களிப்பு 42.2 சதவீதமாக உள்ளது.
தங்கக்கடன் சந்தை வளர்ந்தாலும், கடனைத் திரும்பிச் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. மிக அதிக கடன் அபாயம் கொண்டவர்களின் பங்களிப்பு 2024 செப்டம்பரில் 14.8 சதவீதமாக இருந்த நிலையில், 2026 செப்டம்பரில் 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தங்கக்கடன் மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வழியாக மாறிவரும் நிலையில், அதைச் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக, கடன் பெறுவது எளிதாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தத் தவறினால் நகைகளை இழக்க நேரிடும். எனவே, தங்கத்தின் மதிப்பை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தங்களின் வருமானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்துக் கடன் பெற வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

