பாலின மாற்று அறுவை சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை!

பாலின மாற்று அறுவை சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை!
பாலின மாற்று அறுவை சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை!

இந்தியாவிலேயே முதல் முறையாக அதிக அளவு மூன்றாம் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனை போல் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சை பெறுவதற்காக ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பே-வார்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாசுப்பிரமணியன் பேசுகையில்... கடந்த ஆண்டு நடைபெற்ற நிதிநிலை அறிக்கையின் போது தமிழக முதல்வர் அவர்களால், அனைத்து தர மக்களும் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டண வார்டு பிரிவு அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் தொடங்கப்பட்டது. அதேபோல் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 16 அறைகள் கொண்ட கட்டண வார்டு பிரிவு, ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வார்டில் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, தனி கழிப்பறை ஒரு உதவியாளர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அறை ஒன்றுக்கு 1200 ரூபாய் என்றும், சொகுசு அறைக்கு 2000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மூன்றாம் பாலின அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய சாதனையை படைத்து முதன்மை இடத்தில் உள்ளது. இதுவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 232 பேருக்கு மூன்றாம் பாலின அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக அதிக அளவு மூன்றாம் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்கிறது.

மூன்றாம் பாலின மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் தற்போது வரை 110 பேருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் கருத்தரிப்பு மையம் தொடங்குவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து கடந்த மாதம் நானும் துறையின் செயலாளரும் ஜெய்கா நிறுவன துணைத் தலைவருடன் கூட்டத்தில் கலந்து கொண்டோம். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியது போல் பல மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது இதற்காக அந்த மாநிலங்களின் நிதி மற்றும் மத்திய அரசு நிதியிலிருந்து தொடங்கப்பட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் ஜெய்கா நிதியில் இருந்து கட்டப்படவுள்ளது.

ஆனால், ஒன்றிய அரசு இதற்கான எந்த ஒரு செயலையும் செய்யவில்லை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் டிசம்பர் மாதம் முடிவாகும். 2024 டிசம்பர் 24 தேதி தான் கட்டுமான பணிகள் தொடங்கும். நான்கு ஆண்டுகள் நடைபெற்று 2028 டிசம்பர் இறுதியில் தான் கட்டுமான பணிகள் முடிவடையும்.

முதல்வர் பிரதமருக்கு எப்போதெல்லாம் கடிதம் அனுப்புகிறாரோ அப்போதெல்லாம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கூறிக் கொண்டுதான் இருக்கிறார். முன்பை விட அரசு மருத்துவமனையில் அதிகமான நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், தனித்துவத்தை விரும்புவர்களுக்காக இந்த கட்டண வார்டு வசதியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com