இலங்கை அரசை மத்திய அரசு பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை மத்திய அரசு இனிமேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசியதில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 21 வயதே ஆன பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும், மேலும் பல மீனவர்கள் காயமடைந்திருப்பதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியமாகவே இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இரு இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை இலங்கை அரசு தீர்மானமாக உதாசீனப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரத் தாக்குதல் ராமநாதபுரம் பகுதி மீனவ கிராமங்களில் மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் பதற்றத்தை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் என்று அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கை ராணுவம் இப்போது மீனவர்களை சுட்டுக் கொல்வது என்று முடிவு எடுத்து செயல்படுவதை மத்திய அரசு இனிமேலும் ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசை தூதரக ரீதியாக தொடர்பு கொண்டோ அல்லது இந்தியாவிற்கான இலங்கை தூதரை நேரில் அழைத்தோ இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் அவர் வலியுறுத்தியுள்ளார்.