நீலகிரி: 11-ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள முதல் தலைமுறை பழங்குடியின மாணவிகளுக்கு ஐசிபிஓ உதவி
முதல் தலைமுறையாக 11-ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள 6 பழங்குடியின மாணவிகளுக்கு, புதிய தலைமுறை செய்தியை தொடர்ந்து 1 ஆண்டிற்கு படிப்பிற்குத் தேவையான சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட பென்னை கிராமத்தை சேர்ந்த 6 பழங்குடியின மாணவிகள் முதல் தலைமுறையாக 11-ஆம் வகுப்பில் சேரவுள்ளனர். இது தொடர்பான செய்தி புதிய தலைமுறையில் கடந்த 7-ஆம் தேதி ஒளிப்பரப்பானது. இந்த செய்தியை கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து மாணவிகளின் கல்விக்கு உதவிவரும் தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியனை தொடர்பு கொண்டு, மாணவிகளின் ஏழ்மை நிலை குறித்து அறிந்ததோடு அவர்களின் கல்விக்கு உதவ முன்வந்துள்ளனர். அதன்படி 6 மாணவிகளுக்கும் அடுத்து 1 ஆண்டிற்கு கல்வி பயில தேவையான அனைத்து பொருட்களையும் சுமார் 50 ஆயிரம் மதிப்பில் வழங்கியுள்ளனர்.
ஒரு ஆண்டிற்கு தேவையான பள்ளி சீருடை, காலணி, நோட்டு புத்தகங்கள், குடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொட்டும் மழையிலும் நேரடியாக மாணவிகளின் கிராமத்திற்கே சென்று அவர்களிடம் வழங்கினர். தொடர்ந்து மாணவிகளின் படிப்பு தொடர்பான உதவி தேவைபட்டால் உதவ தயராக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். மாணவிகளின் கல்விக்கு உதவி கிடைத்திட காரணமாக இருந்த புதிய தலைமுறைக்கு பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.