‘தமிழக இளைஞரை நிர்வாணப்படுத்தி 4 லட்சம் கொள்ளை’ - ரஷ்யாவில் நடந்தது என்ன?
ரஷ்யாவில் தமிழக என்ஜினியரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து ரூ. 4 லட்சட்தை பறித்து சென்ற இந்தியாவை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன் (23). இவர் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பிடெக் சிவில் என்ஜினியரிங் படித்துள்ளார். வியாபாரம் தொடங்குவதற்காக பிசினஸ் விசா மூலமாக கடந்த மாதம் 14-ம்தேதி ரஷ்யா சென்ற இவர் படுகாயங்களுடன் கடந்த 30 ஆம் தேதியே சென்னை திரும்பியுள்ளார். தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தாமரைக் கண்ணன் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த டிபின், சஜ்ஜிவ் ஆகியோரும், பஞ்சாப்பைச் சேர்ந்த 4 பேர் என அனைவரது அறிமுகமும் எனக்கு கிடைத்தது.
நண்பர்களாக பழகி வந்த அவர்கள் திடீரென ரஷ்யாவின் மாஸ்கோவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தனர். மேலும் என்னிடம் இருந்து 4 லட்சம் ரூபாயையும் பறித்து கொண்டு பணத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மிரட்டி வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர். மேலும் தன்னை கடுமையாக தாக்கினர்.
பின்பு ரஷ்யாவிலேயே முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு கடந்த 30ஆம் தேதி சென்னை வந்தேன். என்னை தாக்கி பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.