ராணுவ வீரர் இளையராஜா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று தீவிரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் குண்டடிப்பட்டு வீரமரணம் அடைந்தனர். இதில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜாவும் ஒருவர். வீரமரணம் அடைந்த இளையராஜாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர், ராணுவ வாகனம் மூலம் இளையராஜா உடல் அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவகங்கை ஆடுசுரு மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தங்கள் ஊரை சேர்ந்த வீரர் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த செய்தி கேட்டு கண்டனி கிராமமே சோகத்தில் மூழ்கி அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் வீரர் இளையராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.