``அனல்காற்று அதிகரிப்பதால் இந்தியாவில் மின்பற்றாக்குறை தீவிரமடைகிறது” மத்திய அரசு விளக்கம்

``அனல்காற்று அதிகரிப்பதால் இந்தியாவில் மின்பற்றாக்குறை தீவிரமடைகிறது” மத்திய அரசு விளக்கம்
``அனல்காற்று அதிகரிப்பதால் இந்தியாவில் மின்பற்றாக்குறை தீவிரமடைகிறது” மத்திய அரசு விளக்கம்

அனல் காற்று மற்றும் மின்சார தேவை அதிகரிப்பால் நாட்டின் மின்பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 2.64 கிகாவாட்டாக இருந்த நாட்டின் மின் பற்றாக்குறை திங்கள்கிழமை 5.24 கிகா வாட்டாகவும் செவ்வாய்க் கிழமை 8.22 கிகா வாட்டாகவும் உயர்ந்திருக்கிறது. இதேபோல புதன்கிழமை 10.29 கி.கா வாட்டாக அதிகரித்த மின் பற்றாக்குறை வியாழக்கிழமை 10.77 கிகா வாட்டை தொட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்னுற்பத்தி குறைந்த அதே நேரத்தில் கோடை வெயில் அதிகரிப்பால் மின்சார தேவை அதிகரித்ததும் பற்றாக்குறை அதிகரிப்பிற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் நாட்களில் வெயில் தகிப்பு மேலும் உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மின்பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. மேலும் அனல் மின்னுற்பத்தி நிறுவனங்களில் 57 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு வைத்திருக்க வேண்டிய நிலையில் 13 ஆயிரம் டன் மட்டுமே இருப்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாள் வாரியாக மின்பற்றாக்குறையின் நிலை:

24.04.22 - 2.64 கிகாவாட்

25.04.22 - 5.24 கிகாவாட்

26.04.22 - 8.22 கிகாவாட்

27.04.22 - 10.29 கிகாவாட்

28.04.22 - 10.77 கிகாவாட்

இதுவொருபுறமிருக்க, மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் `மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிலக்கரியை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்’ என தெரிவித்துள்ளனர். 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு 12,000 டன் நிலக்கரி 600 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு 14 ஆயிரம் டன் நிலக்கரி நாளொன்றுக்கு தேவைப்படும் நிலையில், தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள 2,3,4 ஆகிய 3 அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட்டிற்கு பதிலாக 160 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com