என்ஜின் இல்லாத இந்தியாவின் அதிவேக ரயில்..! சென்னையில் அறிமுகம்..!
இந்தியாவிலேயே அதிக வேகத்தில் இயங்கக்கூடிய, என்ஜின் இல்லாத ரயிலான ‘ட்ரெயின் 18’ நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
ரயில் பயணத்தையும், அதன் தடதட சத்தத்தையும் விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இத்தகைய ரயில்கள் என்ஜின்கள் மூலமாகத் தான் இயங்குகின்றன. இந்நிலையில் என்ஜின்கள் இல்லாமல் இயங்கக்கூடிய ரயிலானது சென்னை ஐசிஎஃப்பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோகானி இதனை தொடங்கி வைத்தார். முற்றிலும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலானது மற்ற ரயில்களை காட்டிலும் பல்வேறு சிறம்பம்சங்களை கொண்டுள்ளது.
இணைய சேவை பெறுவதற்கான வைஃபை, பயோ டாய்லெட், அதிநவீன கதவுகள் உள்பட சகல வசதிகளுடன் இந்த ரயிலானது தயாரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஏசி வசதி கொண்ட இந்த ரயில் என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடியது.
இந்தியாவிலேயே அதிக வேகத்தில் இயங்கக்கூடிய ரயிலாக தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்தான் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கி.மீ ஆகும். இந்நிலையில் சதாப்தியை விட ‘ட்ரெயின் 18’ அதிவேகத்தில் இயங்கவல்லது. அதாவது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதன்மூலம் சதாப்தி ரயிலில் செல்லும் நேரத்தை விட ‘ட்ரெயின் 18’ ரயிலில் சுமார் 15 சதவீத நேரம் பயணிகளுக்கு மிச்சமாகும்.
மொத்தமாக 16 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தமாக ஒரே நேரத்தில் 1,128 பயணிகள் பயணிக்க முடியும். மெட்ரோ ரயிலில் இருப்பதை போன்று ஆட்டோமெட்டிக் கதவு வசதி உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயிலானது 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்திற்கு பின் விரைவில் இந்த ரயிலானது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் எனத் தெரிகிறது.