'பாலியல் கொடுமை பூமியாக மாறிய இந்தியா' - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
புனித பூமியாக கருதப்படும் இந்தியா, பாலியல் வன்கொடுமை பூமியாக மாறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், தொலைக்காட்சியில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டினார். அதற்கு நீதிபதிகள், புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை என நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இது துரதிஷ்டவசமானது என்றும், குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நியாயமான ஊதியம், பாதிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.