'டெபாசிட் பணம் கட்டணும்னு தெரியாதுங்க!'-தேர்தல் அலுவலரை தலைசுற்ற வைத்த சுயேட்சை வேட்பாளர்
டெபாசிட் தொகையை கட்டாததால் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்கள் நேற்று வரை பெறப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 18 வார்டுகளில் 84 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார். வேட்பாளர்களை வரிசையாக அமர வைத்த நகராட்சி ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலம் வரிசை அடிப்படையில் வேட்பாளர்களை வேட்புமனு பரிசீலனை செய்வதற்காக உதவி தேர்தல் அலுவலர்களிடம் அனுப்பி வைத்தனர். உதவி தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா, அல்லது தள்ளுபடி செய்யப்பட்டதா என்பதை வேட்பாளர்களிடம் தெரிவித்து ரசீது வழங்கினர்.
வேட்புமனு பரிசீலனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 12 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த எல்.ஆறுமுகம் என்பவரின் வேட்பு மனுவை பரிசீலனைக்கு அதிகாரிகள் அழைத்தனர். ஆறுமுகம் தாக்கல் செய்திருந்த ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது அதில் தேர்தலில் போட்டியிட டெபாசிட் கட்டணம் செலுத்திய ரசீது இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து டெபாசிட் கட்டணம் செலுத்திய ரசீது இல்லாததால் உங்கள் வேட்பு மனு நிராகரிக்கப் படுகிறது என சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகத்திடம் அதிகாரிகள் தெரிவித்தனர். டெபாசிட் கட்ட வேண்டும் என எனக்கு தெரியாது. இப்ப கட்ட வேண்டுமா என கேட்டார். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தை கூறி சுயேட்டை வேட்பாளர் ஆறுமுகத்தின் வேட்புமனுவை நிராகரித்தனர்.