”எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகமானால் பாதிக்கப்பட போவது தென் மாநிலங்கள்தான்” - ஆர்.எஸ்.பாரதி சொல்வதென்ன?

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படப்போவது தென் மாநிலங்கள்தான்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் நேற்று (மே 28) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “புதிய நாடாளுமன்ற வளாகம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும். பழைய நாடாளுமன்றத்தில் போதுமான இடவசதி இல்லை. புதிய நாடாளுமன்றம் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும். வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும், அவ்வாறு அதிகரிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டடம் தேவைப்படுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பது காலத்தின் தேவையாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்” என பிரதமர் மோடி பேசியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “1967-க்கு முன்பு தமிழகத்தில் 41 எம்.பிக்கள் இருந்தனர். அதன்பிறகு, மக்கள்தொகை அடிப்படையில் 2 எம்பிக்களைக் குறைத்துவிட்டனர். குடும்பக் கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டதால் மக்கள்தொகை குறைந்தது. எம்.பிக்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் பாதிக்கப்படப்போவது தென்னகம்தான்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை 80இல் இருந்து 14ஆக உயரும். பீகார் மாநிலத்திலும் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விகிதாசார அடிப்படையில் எம்.பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் எம்.பிக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது நியாயமல்ல. சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் காலைத் தட்டிவிடுவது போன்ற செயல் இது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com