“36 கோடி பணம்; 10 கிலோ தங்கம்; 426 கோடி வரி ஏய்ப்பு ”- அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்த தொழிலதிபர்

“36 கோடி பணம்; 10 கிலோ தங்கம்; 426 கோடி வரி ஏய்ப்பு ”- அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்த தொழிலதிபர்

“36 கோடி பணம்; 10 கிலோ தங்கம்; 426 கோடி வரி ஏய்ப்பு ”- அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்த தொழிலதிபர்
Published on

கரூரில் தொழிலதிபர் சிவசாமி வீட்டில் சோதனை செய்ய சென்ற இடத்தில் அலமாரியில் கட்டுக்கட்டாக 36 கோடி ரூபாய் பணம், 10 கிலோ தங்கம், 426 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் இருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்நிலையில் யார் இந்த சிவசாமி என்பதை தெரிந்து கொள்வோம்.

கரூரைச் சேர்ந்த கொசுவலை தயாரிப்பு தொழிலதிபர் சிவசாமி. சாதாரண ஒரு அரசு ஊழியரின் மகனாகப் பிறந்த இவர், 1989-ஆம் ஆண்டு டெக்ஸ்டைலில் இன்ஜினியரிங் படிப்பு முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த சிவசாமி 1990-ஆம் ஆண்டு தனது தந்தையிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கினார். 

கொசுவலை தொழிலில் தீவிரமாக ஈடுபட்டாலும் சுமார் 15 ஆண்டுகாலம் உள்நாட்டில் மட்டுமே கொசு வலைகளை விற்று வந்தார்.  2004, 2005 ஆகிய காலகட்டங்களில் இவரது கம்பெனியின் ஆண்டு மொத்த வர்த்தகம் 70 கோடி ரூபாய்.

சாதாரண கொசுவலை தயாரித்துக் கொண்டிருந்த இவர் பின்னர், ஆல்பா சைபர் மெத்திலின் என்ற கெமிக்கல் கலவை கலந்த கொசுவலை தயாரிக்க ஆரம்பித்தார். இந்த கொசு வலை தயாரிப்பதற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து பெற்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து இவரது வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. ஏனெனில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த ஆல்பா சைபர் மெத்திலின் என்ற கெமிக்கல் தடவிய கொசு வலைகள் அதிகளவில் தேவைப்பட்டன. ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன எந்திரங்கள் கொண்டு கொசுவலை உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இவருடைய கம்பெனி ஆண்டுக்கு 550 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்கிறது

இந்நிலையில்தான், சிவசாமிக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரி சோதனை தொடங்கியது. தொழிற்சாலை, அலுவலகம், உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில், 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரவு பகலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜாப் வொர்க் பெற்று கொசுவலை தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனங்கள் சிலவற்றிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 4 நாட்களாக தொடர்ந்த சோதனை, நேற்று நிறைவுக்கு வந்தது. மொத்தம் 60 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை சிவசாமியின் வீட்டில், அலமாரியில் இருந்து 36 கோடி ரூபாய் ரொக்க பணமும், 10 கிலோ தங்கம், 426 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் எடுக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர்: கண்ணன் (கரூர்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com