நடிகர் விஜய்யின் பனையூர் அலுவலகத்தில் இறந்துபோனதாகக் கூறப்படும் நபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்து வந்ததாகக் கூறப்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்(34) என்பவர் கடந்த 17ஆம் தேதி அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிரபாகரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து விஜய் தரப்பில் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரிடம் விசாரித்தபோது, "இறந்து போன நபர் அலுவலகத்துக்கு பெயிண்ட் பூசும் பணிக்காக வந்தவர் இல்லை. அவர் வேறு ஒரு வீட்டின் பணிக்காக வந்தவர். விஜயின் அலுவலக பணிக்காக வந்தவர் கிடையாது. இந்தப் பகுதியில் அவரைப் பார்த்ததால் இவ்வாறாக தகவல் பரவி வருகிறது. அந்த நபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.