விடாமல் பெய்யும் கனமழை; சென்னை வேளச்சேரியில் மண்ணிற்குள் இறங்கிய கட்டடம் - நடந்தது என்ன?
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக மண்ணுக்குள் இறங்கியது. கேஸ் நிரப்பும் நிறுவனம் இந்த கட்டடத்திற்கு இயங்கி வந்துள்ளது. கட்டடத்திற்குள் சிக்கி 4 பேர் காயம் அடைந்துள்ளனர். மூவர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உள்ளே சிக்கியுள்ளார். அவரை மீட்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வேளச்சேரிக்கு அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை தந்துள்ளனர். கனமழை காரணமாக மீட்புப் பணிகளை தொடர்வது சவாலாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிண்டி காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, புயலாக இருந்து வந்த மிக்ஜாம் தற்போது தீவிரப் புயலாக உருமாறியுள்ளது. சென்னையில் இருந்து கிழக்கே வடகிழக்கு திசையில் 90 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிமீ என்ற அளவில் புயல் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை மசூலிப்பட்டிணம் - நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரப்புயலாக மாறியதால் மழை மேகங்கள் அதிக அளவில் சூழ்ந்து அதிக அளவில் மழை பெய்யக்கூடும். புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை நெல்லூர் பகுதிக்கு செல்லும் பொழுது மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது. தற்போது காற்று பல இடங்களில் 80 கிமீ வேகத்தில் வீசி வருகிறது.

