காந்தியிடம் மன்னிப்புக் கேட்டது சென்னை உயர்நீதிமன்றம்

காந்தியிடம் மன்னிப்புக் கேட்டது சென்னை உயர்நீதிமன்றம்
காந்தியிடம் மன்னிப்புக் கேட்டது சென்னை உயர்நீதிமன்றம்

 ஆங்கிலேயரிடம் நாட்டை காப்பாற்ற போராடி இன்னும் உயிர்வாழும் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தள்ளாத வயதில் உரிய ஆவணங்களை சமர்பித்து ஓய்வூதியம் கேட்டு இப்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார் சுதந்திர போராட்ட தியாகி ஒருவர்.  

அதிகாரிகளுடன் போராடிப் பார்த்து பார்த்து, முடியாமல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் அவர். அவரது வழக்கு விசாரணையை ஏற்றார் நீதிபதி ரவிச்சந்திரபாபு. வழக்கின் விசாரணை முடிந்து அதனை நேற்று முடித்து வைத்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, 30 ஆண்டுகளுக்கு மேலாக உங்களுக்கு ஓய்வூதியம் தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த நாடு சுதந்திரம் பெற வேண்டுமென நீங்கள் போராடினீர்களோ அந்த நாட்டில் பணிபுரியும் நமது அதிகாரிகளின் செயல்பாடு இப்படி இருக்கிறது என வேதனை தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்த அரசு அதிகாரிகள், சுதந்திரப் போராட்டத் தியாகியின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் வயது ஒத்துப் போகவில்லை, அது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றனர். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், நேதாஜி அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லஷ்மி சாகல் தியாகி அவர்கள் இந்திய விடுதலைக்காக போராடியவர் என சான்றளித்ததை விட வேறென்ன வேண்டும், அனைத்திற்கும் காரணம் சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என்றார்.  

விசாரணைக்குப் பின் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, 4 வாரங்களுக்குள்  ஓய்வூதியத்தை வழங்குவதோடு, 1980-முதல் கணக்கிட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குமாறும் உத்தரவிட்டார். நாட்டுக்காகப் போராடிய அவரை மேலும் அலைய விடாமல், நீதிமன்ற உத்தரவை அவரது இல்லத்துக்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு உத்தரவிட்டார். இந்திய விடுதலைப் போரில் 1943-ல் நேதாஜியின் இராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு முறை ஆங்கிலேயரை எதிர்த்து நின்று களம் கண்டதோடு, கேப்டன் லஷ்மி சாகலின் நேரடி கண்காணிப்பு படைப்பிரிவில் பணியாற்றி, ஓய்வூதியத்துக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அலையும் அந்தத் தியாகியின் பெயர் என்ன தெரியுமா? காந்தி! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com