திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்-களை உடைத்து ரூ.75 லட்சம் வரை கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் ஆகியவை, வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து 75 லட்ச ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் மாவட்டத்திலுள்ள 4 ஏடிஎம்-களில் மர்ம நபர்கள் ரூ. 75 லட்சம் வரை கொள்ளையடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஏடிஎம் மற்றும் போளூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மற்றும் மேலுமொரு பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஆகியவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவு வெல்டிங் மிஷின் மூலம் உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதேபோன்று கலசப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தையும் உடைத்து மர்ம நபர்கள் பல லட்சம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். நள்ளிரவில் நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்தித்தை உடைத்து சுமார் 75 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும், ஷட்டரை மூடிவிட்டு கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருக்கிறது. கைரேகை மற்றும் வீடியோ பதிவுகளை வைத்து காவல்துறையினர் தங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 4 இடங்களிலும் இச்சம்பவங்கள் சென்றுள்ளனர்.
இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமானதால் திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு கூடுதல் சவால் நிலவுகிறது. திருட்டு தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவண்ணாமலை - போளூர் - கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார், திருடர்களை தேடி வருகின்றனர்.